முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 செப்டம்பர், 2012 - 18:05 ஜிஎம்டி
சொந்தக்காணிகளில் குடியேற்றுமாறு போராட்டம்

சொந்தக்காணிகளில் குடியேற்றுமாறு போராட்டம்

இலங்கையின் வடக்கே, முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை அவர்களது சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி முல்லைத்தீவு அரச செயலகத்தின் எதிரில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பயணம் செய்த ஒரு பேருந்து உட்பட நான்கு வாகனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியதில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலை இராணுவத்தினரின் புலனாய்வு பிரிவினரே நடத்தியதாகவும் இது தொடர்பில் பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் நேரடியாகச் சென்று முறையிடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதனால், இங்கு மீள்குடியேற்றம் இன்னும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மக்களின் சொந்த நிலங்கள் அபகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

மக்களின் சொந்த நிலங்கள் அபகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

இந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 350 குடும்பங்களையும் வேறிடத்தில் குடியேற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், அதற்கு அந்த மக்கள் உடன்படவில்லை.

தமது சொந்தக் காணிகளிலேயே தம்மை மீள்குடியேற்றம் செய்யவேண்டும் என அவர்கள் கோரி வருகின்றார்கள்.

இந்த நிலையில் வெள்ளியன்று முல்லைத்தீவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கழிவுப் பொருட்கள், கழிவு எண்ணெய் வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் மனிக்பாம் முகாமில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வசிப்பவர்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என்று அமைதியான ஜனநாயக வழிமுறையில் கோருவதற்கு கூட முடியாத ஒரு நிலைமையே முல்லைத்தீவில் நிலவுவதாகவும், அங்கு கருத்துச் சுதந்திரம் பேச்சுச்சுதந்திரம் இல்லாத ஒரு சூழலே நிலவுவதாகவும் கஜேந்திரன் குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நவசமசமாஜகட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட பல்வேறு கட்சிகளின் முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.