பல்கலைக்கழக சமூகங்களின் பேரணிகள் கொழும்பில் நிறைவு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 செப்டம்பர், 2012 - 13:45 ஜிஎம்டி
பல்கலைக்கழகங்களுக்கு அரசியல் தலையீடு கூடாது என்பதும் ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று

பல்கலைக்கழகங்களில் அரசியல் தலையீடு கூடாது என்பதும் ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று

இலங்கையில் பல்கலைக்கழக சமூகம் கடந்த ஐந்து நாட்களாக முன்னெடுத்துவந்த பேரணிகள் இரண்டும் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நிறைவடைந்தன.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளனமும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனமும் கண்டி மற்றும் காலி ஆகிய நகரங்களிலிருந்து கடந்த திங்கட்கிழமை இந்த பேரணிகளை ஆரம்பித்தன.

மொத்தத் தேசிய உற்பத்தியிலிருந்து 6 வீதத்தை நாட்டின் கல்வித்துறைக்கு ஒதுக்குமாறும் பல்கலைக்கழகங்களுக்குள் நேரடி அரசியல் தலையீட்டை ஒழிக்குமாறும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளப் பிரச்சனையை தீர்க்குமாறும் இன்னபல கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த இரண்டு பேரணிகளும் நடத்தப்பட்டன.

அரசுக்கும் விரிவுரையாளர்களுக்கும் இடையில் பல சுற்றுக்களாக நடந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காத பின்னணியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகிறார்கள்.

அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் கல்வித்துறையை பாதுகாக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

ஊர்வலமாக வந்து, கொழும்பு லிப்டன் சுற்றுவட்டம் பகுதியில் நடந்த பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அங்கிருந்து ஹைட்பார்க் மைதானத்தை நோக்கிச் சென்று அங்கு நடந்த இறுதிக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஊர்வலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர், மக்கள் விடுதலை முன்னணியினர் மற்றும் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என பெருமளவிலான அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டார்கள்.

ஹைட்பார்க் மைதானத்தில் நடந்த இறுதிக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க உள்ளிட்ட எதிரணித் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இரண்டு திசைகளிலிருந்தும் கொழும்பை நோக்கிவந்த இந்த இரண்டு பெரிய பேரணிகளாலும் கொழும்பில் இன்று போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது, பல வீதிகள் மூடப்பட்டிருந்தன.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.