இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் கேப்பாபிலவு மக்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 செப்டம்பர், 2012 - 16:42 ஜிஎம்டி
கேப்பாபிலவிலிருந்து இராணுவம் வெளியேறாது என்று அறிவித்துள்ளதால் சீனியாமோட்டை என்ற பிரதேசத்தில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்

கேப்பாபிலவிலிருந்து இராணுவம் வெளியேறாது என்று அறிவித்துள்ளதால் சீனியாமோட்டை என்ற பிரதேசத்தில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்

வவுனியா செட்டிக்குளம் மனிக்பாம் முகாம் மூடப்பட்டவுடன் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டு சீனியாமோட்டை என்ற இடத்தில் குடியேற்றப்பட்டுள்ள கேப்பாப்பிலவு பகுதியைச் சேர்ந்த மக்கள் கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில், சுதந்திரமாக நடமாட முடியாத ஒரு சூழ்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.

அங்கு சென்று நிலைமைகளை நேரில் பார்வையிட்டுத் திரும்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் இதுபற்றி பிபிசி தமிழோசைக்கு அளித்துள்ள செவ்வியில் சுட்டிக்காட்டினார்.

குறித்த பகுதிக்கு செல்ல ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் அங்கு மக்கள் படும் துயரங்கள் பற்றி வெளியாருக்குத் தெரியவரக்கூடாது என்பதில் பாதுகாப்புத் தரப்பினர் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அங்குள்ள மக்களின் உறவினர்கள், நண்பர்கள் அங்கு செல்லமுடியாதவாறு கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் அங்கிருந்து வெளியில் சென்றுவருவதிலும் அந்த மக்களுக்கு பாதுகாப்பு கெடுபிடிகள் இருப்பதாகவும் நோகராதலிங்கம் தெரிவித்தார்.

அடிப்படை வசதிகள் இல்லை

மூன்று நாட்களாகியும் இன்னும் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை

மூன்று நாட்களாகியும் இன்னும் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை

இந்த மக்கள் தாங்களாகவே அமைத்துள்ள கொட்டில்கள், கூடாரங்களில் மழைநீர் உட்புகக்கூடிய நிலைமை இருப்பதால் மழை காலத்தில் அவர்கள் பெரும் சிரமங்களை அனுபவிக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

மக்கள் இந்த இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு 3 தினங்களாகிவிட்ட போதிலும் இன்னும் போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நோகராதலிங்கம் தெரிவித்தார்.

கேப்பாப்பிலவு மக்கள் குடியேற்றப்பட்டுள்ள இடத்தில் மின்சார வசதியோ குடிநீர் வசதிகளோ இல்லை என்றும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் கோரியுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

கேப்பாப்பிலவு பகுதியில் நிலைகொண்டிருக்கின்ற இராணுவத்தினர் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கிருந்து வெளியேறமாட்டார்கள் என இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனினும் கேப்பாப்பிலவு பகுதி மக்கள் தமது சொந்தக் காணிகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதையே தன்னிடம் வலியுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நோகராதலிங்கம் தெரிவித்தார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.