கேப்பாபிலவு மக்களுக்கு தமிழ் தலைவர்களின் நிவாரண உதவி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 அக்டோபர், 2012 - 16:58 ஜிஎம்டி
மனிக்பாம் போன்று சீனியாமோட்டையும் இடைத்தங்கல் முகாமே என்கின்றனர் மக்கள்

மனிக் பாம் போன்று சீனியாமோட்டையும் இடைத்தங்கல் முகாமே என்கின்றனர் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு பிரதேசம் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருப்பதனால், தேசிய பாதுகாப்பை முன்னிட்டு அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களை சீனியாமோட்டையில் குடியேற்றியிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.

அந்த மக்களுக்காக நிரந்தர வீடுகள், தொழில் வாய்ப்புக்கள் என்பவற்றை எற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், மனிக்பாம் இடைத்தங்கல் முகாமைப்போன்று அரசாங்கம் தங்களை சீனியாமோட்டையில் தற்காலிக முகாமில் குடியமர்த்தியிருப்பதாகவே அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

இப்போது அங்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள போதிலும் மாணவர்களுக்கான போக்குவரத்து, பொதுவான குடிநீர் வசதிகளுடன் நிரந்தர வீடுகள், தொழில்வாய்ப்புக்கள் இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

தமது சொந்தக் காணிகளுக்குச் செல்வதையே தாங்கள் விரும்புவதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

சீனியாமோட்டையில் உள்ள மக்களுக்கு அரசாங்கம் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.

'சொந்தக் காணிகளே கிடைக்கவேண்டும்' : கேப்பாபிலவு மக்கள்

'சொந்தக் காணிகளே கிடைக்கவேண்டும்' : கேப்பாபிலவு மக்கள்

எனினும், அவை அவர்களுக்குப் போதாது என்று தாங்களும் இன்று சனிக்கிழமை நிவாரணப் பொருட்களை வழங்கியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

வவுனியா வர்த்தகர்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் உதவியுடன் இந்த நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனும் இந்த நிவாரண விநியோக நிகழ்வில் கலந்துகொண்டார்.

சீனியாமோட்டையில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவர்களின் சொந்தக் காணிகள் மீண்டும் கிடைக்கவேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்று இங்கு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

சீனியாமோட்டையில் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் இராணுவத்தின் காவல் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த போதிலும், அங்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்தவில்லை.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.