கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் நிதிப் பிரச்சனையில்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 அக்டோபர், 2012 - 16:36 ஜிஎம்டி
பள்ளி மாணவர்களிடையே கண்ணிவெடி அபாயம் பற்றிய விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன

பள்ளி மாணவர்களிடையே கண்ணிவெடி அபாயம் பற்றிய விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன

இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் நிதிப்பற்றாக்குறையை எதிர்நோக்கியிருப்பதாக எஃப்.எஸ்.டி என்ற சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளையும், ஏனைய வெடிபொருட்களையும் அகற்றுவதற்கு கொடையாளி நாடுகளே நிதியுதவியை வழங்கி வருகின்றன.

இந்த நிதியுதவி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தடங்கலே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள எல்லா உள்ளுர் மற்றும் சர்வதேச கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களும் நிதிப்பற்றாக்குறையை எதிர்நோக்கியிருப்பதாகவும் அதுபற்றி கொடையாளி நாடுகளிடம் பேச்சு நடத்திருப்பதாகவும் எஃப்.எஸ்.டி நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஹார்ட்மட் தொம்ஸ் கூறுகின்றார்.

யுத்த மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள பொதுமக்கள் மத்தியில் கண்ணிவெடி, மிதிவெடி மற்றும் அடையாளம் தெரியாத வெடிப்பொருட்களின் ஆபத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் எஃப்.எஸ்.டி அமைப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் பிபிசியிடம் பேசிய எஃப்.எஸ்.டி நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் நிறுவனங்கள் எதிர்நோக்கியுள்ள நிதிச் சிக்கல் பற்றி விபரித்தார்.

இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கிட்டத்தட்ட 113 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியிருப்பதாக ஒச்சா எனப்படும் மனிதாபினமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகம் அறிக்கையொன்றில் கூறியிருக்கின்றது.

இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் கண்ணிவெடி தொடர்பான வெடிச் சம்பவங்களில் மாத்திரம் 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.