"கடத்திய" படகில் ஆஸ்திரேலியா சென்ற இலங்கையர் திருப்பி அனுப்பப்பட்டனர்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 அக்டோபர், 2012 - 13:12 ஜிஎம்டி
அகதிகள் படகு ஒன்று (பழைய படம்)

இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் ஒரு படகில் ஆஸ்திரேலியா நோக்கி வந்தவர்கள் 14 பேர் ஆஸ்திரேலிய அதிகாரிகளால் வழிமறிக்கப்பட்டு தற்போது தனி விமானம் மூலம் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

செஜன் என்ற பெயர் கொண்ட இந்தப் படகு, ஆஸ்திரேலியா அருகிலுள்ள கோகோஸ் தீவுகளுக்கு வட மேற்கே வியாழன் இரவு ஆஸ்திரேலிய அதிகாரிகள் கண்ணில் பட்ட பின்னர் வழிமறிக்கப்பட்டிருந்தது.

"கடத்தப்பட்ட படகு"

இந்தப் படகு கடந்த ஒக்டோபர் 14ஆம் தேதி இலங்கை கடற்பரப்பில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாக இலங்கை பொலிசார் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்தப் படகை கடத்திச் சென்றபோது, ஒருவரை கொல்ல முயற்சி நடந்தது என்றும், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்றும் இலங்கையின் பொலிசார் கூறியிருந்தனர்.

ஒருவரின் கழுத்தை அறுத்துவிட்டு, மற்றவர்களை கட்டிப்போட்டுவிட்டு படகு கடத்திக் கொண்டுசெல்லப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு படகை கடத்திச் சென்றவர்கள் மீது கைது ஆணை பிறப்பித்திருந்த இலங்கை பொலிசார் இண்டர்போலின் உதவியை நாடியிருந்தனர்.

இப்படி ஒரு படகு ஆஸ்திரேலியா நோக்கி வரும் என இலங்கை பொலிசார் ஆஸ்திரேலிய அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர்

ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவென்

ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவென்

இந்நிலையில், இப்படகில் கோகோஸ் தீவுகள் அருகே வந்தவர்கள் ஆஸ்திரேலியாவிடம் இருந்து பாதுகாப்பு கோரவும் இல்லை, ஆஸ்திரேலியாவுக்கு இருக்கக்கூடிய சர்வதேச கடப்பாடுகளை தொடும் விதமான பிரச்சினை எதனையும் அவர்கள் எழுப்பவும் இல்லை என்று ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை கூறுகிறது.

ஆகவேதான் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், இலங்கைக்கே அவர்களை திருப்பி அனுப்பியது பொருத்தமான செயல்தான் என ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவென் சிட்னியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

படகில் வந்த 15 பேரில் ஒருவர் மட்டும் இன்னும் திருப்பி அனுப்பப்படவில்லை என்றும் இன்னும் ஒரு சில நாட்களில் அவர் திருப்பி அனுப்பப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தவிர திருப்பி அனுப்பப்பட்டவர்களில் மூன்று பேர் சிறார் என்றும், ஒருவர் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோர முயன்று திருப்பி அனுப்பப்பட்டவர் என்றும் அமைச்சர் பொவென் குறிப்பிட்டார்.

இவர் சில வாரங்கள் முன்புதான் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்ப ஒப்புக்கொண்டு இலங்கைக்கு திரும்பிப் போனவர் என்றும், ஆனால் இவர் இந்தப் படகில் மீண்டும் வந்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.