போர்க்குற்ற விசாரணை: பிரிட்டன் வந்த குழுவுக்குள் முரண்பாடு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 அக்டோபர், 2012 - 16:48 ஜிஎம்டி
இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு மறுக்கிறது.

இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு மறுக்கிறது.

இலங்கையிலிருந்து பிரிட்டன் வந்துள்ள ஆளுங்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளம்-பிரதிநிதிகள் புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் பிரிட்டன் வந்துசென்ற இந்தத் தூதுக்குழுவினர் இரண்டாவது கட்டமாக புலம்பெயர் தமிழர்கள் சிலருடன் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.

பிரிட்டனில் வாழும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளதாகக் கூறும் இந்தத் தூதுக்குழுவினர், இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் விடுதலை,அரசியல் தீர்வுத் திட்டத்தை துரிதப்படுத்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கி அரசுக்கு தாம் பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக பிபிசியிடம் கூறினர்.

போர்க்குற்ற விசாரணை தேவையா?

புலம்பெயர் சமூகத்துடன் சந்திப்பு: முரண்பட்ட இலங்கை தூதுக்குழு

போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை தேவை என்று பிரிட்டனின் புலம்பெயர் தமிழர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் இலங்கைத் தூதுக்குழுவினர் தங்களுக்குள் முரண்படுகின்றனர்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில் இங்கு வந்துள்ள இந்தத் தூதுக்குழுவினர், கடந்த ஆண்டு சந்திப்பின்போது தம்மிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை இலங்கையில் உள்ள ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தரப்பினருடன் கலந்து ஆராய்ந்துவிட்டு அங்கு எட்டப்பட்ட முடிவுகளை அறிவிப்பதற்காக மீண்டும் பிரிட்டன் வந்ததாகவும் கூறினர்.

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு சந்திப்பின் போது புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை வைத்ததாகவும் அதுபற்றி தமது தூதுக்குழுவினரும் இணக்கம் தெரிவித்து, அந்த விசாரணைகளை நடத்தவேண்டும் என்று பரிந்துரை முன்வைத்திருப்பதாகவும் இந்த தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதி ரகு பாலச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஆனால் இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கைக்கு தாங்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை என்று இதே தூதுக்குழுவில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ பிபிசியிடம் கூறினார்.

'இலங்கையில் நடந்த யுத்தத்தின்போது நடந்ததாகக்கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு மீதோ அல்லது இலங்கை இராணுவம் மீதோ விரல் நீட்டுவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். உண்மையில் அதுபற்றி இவர்களுக்கு விளக்குகின்ற வேலையைத்தான் நாங்கள் செய்கின்றோம்' என்றார் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.