பிரான்ஸில் விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர் கொலை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 9 நவம்பர், 2012 - 13:24 ஜிஎம்டி

விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாட்டாளர் என்று கூறப்படும் நடராஜா மதிதரன் ( பரிதி) என்பவர் பிரான்ஸின் பாரிஸ் நகரில் 8 ஆம் திகதி வியாழக்கிழமை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

2006 ஆம் ஆண்டு பிரான்ஸில் விடுதலைப்புலிகள் அமைப்பின் வேறு இரு செயற்பாட்டாளர்களான நாதன் மற்றும் கஜன் ஆகியோர் கொலைசெய்யப்பட்டு, அது குறித்த விசாரணைகள் இன்னும் பூர்த்தியாகாமல் இருக்கும் நிலையில் இந்த கொலை தற்போது அங்கு நடந்திருக்கிறது.

வியாழக்கிழமை மாலை தனது அலுவலகத்தில் இருந்து மதிதரன் வேறு சிலருடன் வெளியே வந்த போது அவரை இனந்தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றதாக முதற்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆயினும் கொலையைச் செய்தவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒரு வருடத்துக்கு முன்பாகவும் மதிதரன் இதே இடத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகியது இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளியாக செயற்பட்டு வந்த இவர், 2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிரான்ஸ் வந்து அங்கு அரசியல் மற்றும் நிதி திரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டில் 2007 இல் கைது செய்யப்பட்ட அவர் 2010 ஆம் ஆண்டு சில நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டதாகவும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.