ஜனாதிபதி, சபாநாயகருடன் பேச்சு நடத்த சட்டத்தரணிகள் தீர்மானம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 நவம்பர், 2012 - 18:13 ஜிஎம்டி
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

இரண்டரை தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கை சட்டத்தரணிகள் அதிகளவில் கூடி எடுத்துள்ள தீர்மானம் இதுவென்று சங்கத்தின் தலைவர் விஜேதாச ராஜபக்ஷ கூறினார்.

இலங்கையில் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்குவதற்காக அரசாங்கம் கொண்டுவந்துள்ள கண்டன தீர்மானம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடமும் சபாநாயகரிடமும் கோரிக்கை விடுப்பதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஏனைய சுயாதீன சட்டத்தரணிகள் அமைப்புகளும் தீர்மானித்துள்ளன.

தலைமை நீதியரசருக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றக்கூடாது என்று சட்டத்தரணிகள் நீண்டநேர பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் தெரிவித்தார்.

அரசாங்கம் தொடர்ந்தும் கண்டன தீர்மானத்தை முன்னெடுத்துச்செல்ல தீர்மானித்தால், அந்த விசாரணை நடக்கவேண்டிய முறைபற்றி சபாநாயகருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.

தலைமை நீதியரசர் மீதான விசாரணைகளை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதியரசர்களுக்கு அவகாசம் வழங்கவேண்டும் என்ற யோசனையொன்றும் சட்டத்தரணிகளின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தலைமை நீதியரசர் மீதான நாடாளுமன்றத்தின் குற்றப்பிரேரணை விசாரணைகள் சுதந்திரமாக நடப்பதை உறுதிசெய்வதற்கு சட்டத்தரணிகள் இந்த தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாக ஃப்ரீ மார்ச் சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க கூறினார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.