ஐநா அதிகாரிகளை மிரட்டியதான குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 நவம்பர், 2012 - 10:57 ஜிஎம்டி

இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் (2009) ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களை பயமுறுத்தி பணிய வைத்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் முற்றாக மறுத்திருக்கிறது.

பிபிசிக்கு கசிந்த ஒரு ஐநா அறிக்கையில் அந்தக் குற்றச்சாட்டுக்கள் இடம்பெற்றிருந்தன.

பொதுமக்களை பாதுகாக்க ஐநா தவறியது என்று தன்னைத் தானே ஐநா குற்றஞ்சாட்டிக் கொள்ளும் அந்த அறிக்கையில், ஐநா பணியாளர்கள் பகிரங்கமாக கருத்து தெரிவிப்பதை குறைப்பதற்காக இலங்கை அரசாங்கம், அவர்களை மிரட்டி பணிய வைத்தது என்றும் கூறப்பட்டிருந்தது.

ஒரு சிறிய நாடு ஐநாவை பணிய வைத்தது என்று கூறுவது முற்றிலும் பொருளற்றது என்று ஐநாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கோகன்ன கூறியுள்ளார்.

பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுப்பதை கொழும்பில் இருந்த ஐநா அதிகாரிகள் தமது பொறுப்பில் ஒன்றாக கருதியிருக்கவில்லை என்றும் அந்த அறிக்கை விமர்சித்திருந்தது.

போர் நடந்த வன்னியில் இருந்து ஐநா வெளியேறுவது என்று எடுக்கப்பட்ட முடிவையும் அந்த அறிக்கை கண்டித்திருந்தது. அதனால்தான் அதிகளவு பொதுமக்கள் கொல்லப்படுவதை ஐநாவால் தடுக்க முடியாமல் போனது என்றும் அந்த அறிக்கை கூறியிருந்தது.

ஐநா அதிகாரி விமர்சனம்

இந்த அறிக்கையை ஐநாவின் மனித நேயப் பணிகளுக்கான முன்னாள் தலைவரான ஜோண் ஹோல்ம்ஸ் அவர்களும் விமர்சித்திருக்கிறார்.

தாம் பொதுமக்கள் இழப்புகள் பற்றி மிகச்சரியாக கூறுவது என்பது அப்போதை சூழ்நிலையில் மிகவும் கடினமாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் பகிரங்கமாக பேசியிருந்தாலோ அல்லது இறந்தவர்களின் எண்ணிக்கையை அதிகமாக கூறியிருந்தாலோ, இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டில் மாற்றம் இருந்திருக்கும் என்ற கருத்தை அவர் நிராகரித்திருக்கிறார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.