மனிக்பாமில் மரம் நடும் இராணுவம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 நவம்பர், 2012 - 15:14 ஜிஎம்டி

இலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்தவர்கள் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருந்த, வவுனியா செட்டிகுளம் மனிக்பாம் முகாம் பகுதியில், தேசத்திற்கு நிழல் என்னும் தேசிய மட்டத்திலான மரநடுகை திட்டத்தின் கீழ், இராணுவத்தினர் பழமரச் செய்கையில் ஈடுபட்டிருப்பது குறித்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, கவலை வெளியிட்டிருக்கின்றது.

இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் அங்கிருந்து மீள்குடியேற்றத்திற்காகவும், வேறிடங்களில் குடியேற்றப்படுவதற்காகவும் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, மனிக்பாம் முகாமை இராணுவம் தனது பொறுப்பிலேயே வைத்திருக்கின்றது. இந்தக் காணிகளில் இராணுவத்தினர் காய்கறி செய்கையிலும் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பகுதியில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையில் ஆயிரம் பழக்கன்றுகள் வெள்ளியன்று நாட்டப்பட்டிருக்கின்றன.

இதுபற்றி தமிழோசைக்குக் கருத்து வெளியிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தேசத்திற்கு நிழல் தரும் திட்டத்தின் கீழ் மரநடுகை மேற்கொள்வதையோ, பழமரத் தோட்டங்கள் உருவாக்கப்படுவதையோ தாங்கள் எதிர்க்கவில்லை என்றும், பொதுமக்கள் பயன்படுத்தத்தக்க காணிகளில் இராணுவத்தினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதையே தாங்கள் கண்டிப்பதாகவும் கூறினார்.

அவசர அவசரமாக மனிக்பாம் முகாமில் இருந்த மக்களை வெளியேற்றிய அரசாங்கம், சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதாகத் தெரிவித்து, அவர்களில் பலரை காட்டுப்பகுதிகளில் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் குடியேற்றியிருக்கின்றது. அவ்வாறு செய்துவிட்டு மனிக்பாம் முகாமை இராணுவம் தனது விவசாயச் செய்கைக்காகப் பயன்படுத்துகின்றது.

இது மனிக்பாம் முகாம் பிரதேசத்தின் ஆறாயிரத்து இருநூறு ஏக்கர் காணிகளையும் இராணுவம் கைப்பற்றுவதற்கான உள்நோக்கம் கொண்ட செயலாகவே தாங்கள் கருதுவுதாகவும், அதனைக் கண்டிப்பதாகவும் அவர் குற்பிட்டார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.