அரசகரும மொழிக் கொள்கையை மீறினால் வழக்கு: சாத்தியமா?

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 நவம்பர், 2012 - 19:39 ஜிஎம்டி
அரசகரும மொழிக் கொள்கையை மீறியுள்ள 75 நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன: ஆணைக்குழு

அரசகரும மொழிக் கொள்கையை மீறியுள்ள 75 அரச நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன, பல நிறுவனங்கள் பற்றி தகவல்கள் திரப்பட்டுகின்றன: ஆணைக்குழு

இலங்கையில் அரசகரும மொழிக் கொள்கையை உரியமுறையில் கடைப்பிடிக்காத அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அரசகரும மொழிகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரசகரும மொழிக்கொள்கையை மீறியுள்ள 75 அரச நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், ஏனைய அரச நிறுவனங்கள் பற்றிய தகவல்களை திரட்டிவருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர் ரணவக்க உள்ளூர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் சைஃப்டீன்

எல்லா அமைச்சுகளுக்கு எதிராகவும் வழக்கு நடவடிக்கை சாத்தியமா?

அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் என்.பி.எம். சைஃப்டீன் செவ்வி.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இதேவேளை, இலங்கையில் அரசியல் ரீதியாக 'செல்வாக்கு' மிக்க அமைச்சுகளுக்கு, குறிப்பாக ஜனாதிபதிக்கு உட்பட்ட அமைச்சுகளின் அரச நிறுவனங்களுக்கு எதிராக இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பது என்பது நடைமுறையில் கேள்விக்குறியே என்று அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மூத்த விரிவுரையாளருமான என்.பி.எம். சைஃப்டீன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

அரசகரும மொழிக்கொள்கையை மீறும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றம் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கமுடியும் என்கின்ற அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருக்கின்ற போதிலும், 2010-ம் ஆண்டுவரையான தனது 10 ஆண்டுகால பதவிக்காலத்தில் தமக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்து எந்தவொரு வழக்கும் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

'கடந்த 50 ஆண்டுகளில் முன்னேற்றம் இல்லை'

மும்மொழித் திட்டம் என்ற புதிய செயற்திட்டம் 2012 ஜனவரியில் கோலாகலமாக தொடங்கப்பட்டது.

'மும்மொழி இலங்கைக்கான ஆண்டு' என 2012-ம் ஆண்டை ஜனாதிபதி இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பிரகடனம் செய்திருந்தார்.

நாட்டில் மொழிப்பிரச்சனை என்பது 1956-ம் ஆண்டில் தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டபோது நிலவிய சூழ்நிலையிலிருந்து இன்றுவரை எந்தவிதத்திலும் முன்னேற்றம் அடையவில்லை என்றும் தமிழோசையிடம் அவர் தெரிவித்தார்.

'அரசியலமைப்பில் அரசகரும மொழி சிங்களம் மட்டுமல்ல, தமிழும் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தாலும் அதன் நடைமுறையை இன்னும் காணமுடியவில்லை' என்று அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் சைஃப்டீன் தெரிவித்தார்.

இலங்கையின் மொழிப்பிரச்சனை ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் நிலவிய சூழ்நிலையே இன்னும் நாட்டில் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் பல அரச நிறுவனங்களில் தமிழ் அதிகாரிகள் இல்லை என்றும், தமிழ் மொழிபெயர்ப்பு தெரிந்த அதிகாரிகள் இல்லாத நிறுவனங்கள் பல இருப்பதாகவும் சைஃப்டீன் தெரிவித்தார்.

சில அரச நிறுவனங்களில் பணியாற்றும் தமிழ் அதிகாரிகளும் அரசகரும மொழிக் கொள்கை சரிவரக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை சுட்டினால் தேவையற்ற 'முத்திரைகள்' தம்மீது குத்தப்படும் என்று அஞ்சுவதாகவும் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் 1987-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13-ம் திருத்தத்தின் அங்கமாகவே தமிழும் அரசகரும மொழி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.

அதன்படி சிங்களம், தமிழ் இரண்டும் அரசகரும மொழிகள். ஆங்கிலம் இணைப்பு மொழி என அறிவிக்கப்பட்டது.

அது அரச நிறுவனங்களில் முறையாக பின்பற்றுப்படுகிறதா என்பதை மேற்பார்வை செய்வதற்காகவே அரசகரும மொழிகள் ஆணைக்குழுவும் 1991-ம் ஆண்டு சட்டப்படி நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.