'மாத்தளை புதைகுழி குற்றச் செயல் தொடர்புடையதாக இருக்கலாம்'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 டிசம்பர், 2012 - 15:33 ஜிஎம்டி
ஜேவிபி கிளர்ச்சியின்போது மாத்தளை பகுதி முக்கிய மையமாக இருந்தது.

ஜேவிபி கிளர்ச்சியின்போது மாத்தளை பகுதி முக்கிய மையமாக இருந்தது.

இலங்கையின் மத்திய மாகாணத்தில் பலர் கொல்லப்பட்டு ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட இடம்போல தோன்றும் ஒரு இடத்திலிருந்து இன்றுவரை சுமார் 60 சடலங்களின் எஞ்சியிருக்கும் பாகங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

மாத்தளை மருத்துவமனை அமைந்திருக்கும் இந்த இடத்தில் தொடர்ந்தும் தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன.

20 ஆண்டுகளுக்கு மேலான காலத்துக்கு முன்னர் இலங்கையில் பெரும் ரத்தக்களறியை ஏற்படுத்திய ஒரு கிளர்ச்சியில் பங்கேற்ற சிங்கள கெரில்லாக்களின் உடல்கள் இவை என்று சில குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

இதேவேளை, இந்த உடல்கள் அரசியல் அல்லாத வேறு சூழ்நிலைகளில் இறந்தவர்களின் உடல்கள் என்றும் வேறு சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

மாத்தளை நகரில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையில் புதிய கட்டிடம் ஒன்றைக் கட்டிவரும் தொழிலாளர்களால் கடந்த மாத பிற்பகுதியில் இந்த மண்டை ஓடுகள் மற்றும் எலும்புக்கூடுகளின் துண்டுகள் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டன.

பின்னர், தொடர்ந்தும் மேலும் மேலும் உடல் பாகங்கள் பல கிடைக்க ஆரம்பித்தன.

வெள்ளிக்கிழமை மாலை வரை, 58 மனித உடல்களின் வெவ்வேறு துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தடயவியல் மருத்துவ வல்லுநர் டாக்டர் அஜித் ஜயசேன பிபிசியிடம் கூறினார்.

இன்னும் சில உடல் பாகங்கள் அங்கே இருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

இந்த இடம் சாதாரணமாக இறந்தவர்கள் புதைக்கப்படும் இடுகாடாக இருந்ததில்லை என்பதால், இது ஒரு குற்றம் நடந்த இடம் போலவே தெரிவதாக டாக்டர் ஜயசேன கூறினார்.

ஆனால் இது குறித்து வல்லுநர் குழு அதன் வேலையை முடிக்கும் வரை எந்த ஒரு தீர்மானமான முடிவுக்கும் வர முடியாது.

மேலும் இந்த உடல் பாகங்கள் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது அதில் கண்டெடுக்கப்பட்ட சில எலும்புகள் சேதமாக்கப்பட்டுவிட்டன.

ஜேவிபி கிளர்ச்சியாளர்களின் உடல்களா?

ஜேவிபி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அக்கட்சியினர் சந்தேகிக்கின்றனர்.

ஜேவிபி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அக்கட்சியினர் சந்தேகிக்கின்றனர்.

1980-களில் ஜனதா விமுக்தி பெரமுன அல்லது ஜேவிபி (மக்கள் விடுதலை முன்னணி) என்ற சிங்கள இடது சாரி இயக்கம் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது, அந்தக் கிளர்ச்சியாளர்களின் வன்முறைக்கு சமமான அளவில், அரசும் வன்முறையை பிரயோகித்தது.

அப்போது இந்த மாத்தளை பகுதியே இந்தக் கிளர்ச்சிக்கு மையமான இடமாக இருந்தது.

இப்போது அரசியல் இயக்கமாக மாறியிருக்கும் ஜேவிபி, அதன் முந்தை நாள் உறுப்பினர்கள் இந்த இடத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறது.

இது குறித்து விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்று அது கோருகிறது.

இந்தக் கருத்துக்கு மாறாக, இந்த இடத்தில் புதையுண்டிருப்பவர்கள் 1940-களில் இங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தவர்களாக இருக்கலாம் என்று போலிஸ் அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

இவர்கள் பெரியம்மை வந்து இறந்தவர்கள் என்று முன்னாள் மருத்துவ மனை ஊழியர் ஒருவர் கூறுகிறார்.

இது பலர் கொன்று-புதைக்கபட்ட இடம் என்பது உண்மையாக இருந்தால், துரதிஷ்டவசமாக இது இலங்கையில் புதிய ஒரு விடயமாக இருக்காது.

இது போல ஜேவிபி காலத்தோடு தொடர்புடைய ,சுமார் ஒரு டஜன் இடங்கள் இருப்பதாக நம்ப்படுகிறது.

இந்தக் கிளர்ச்சிக் காலகட்டத்தில் சுமார் 60,000 இளைஞர்கள் காணாமல் போயினர் என்று கூறப்படுகிறது.

அதுபோல வடக்கே போர் முடிந்த பகுதியிலும் 2009ம் ஆண்டு நடந்த குண்டு வீச்சில் பல ஆயிரக் கணக்கான சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

ஆனால் அங்கு இது போல வெளிப்படையான தோண்டியெடுக்கும் நடவடிக்கை எதுவும் அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.