இணையம் மூலம் பண மோசடி: 100 சீனர்கள் இலங்கையில் கைது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 டிசம்பர், 2012 - 11:49 ஜிஎம்டி
காவல்துறையின் இரவு நேர தேடுதல் வேட்டையில் 100 பேரும் சிக்கினர்.

காவல்துறையின் இரவு நேர தேடுதல் வேட்டையில் 100 பேரும் சிக்கினர்.

இலங்கையில் இணையதளம் மூலம் பண மோசடியில் ஈடுபட்டுவந்த சீனப் பிரஜைகள் 100 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

தலைநகர் கொழும்பிலும் அண்டிய பிரதேசங்களிலும் பொலிசார் மேற்கொண்ட இரவுநேர சிறப்பு தேடுதல் வேட்டையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறைப் பேச்சாளர் எஸ்எஸ்பி பிரிஷாந்த ஜயக்கொடி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்ட இந்தப் சீனப் பிரஜைகளில் 74 ஆண்களும் 26 பெண்களும் அடங்குகின்றனர். இவர்கள் நீதவான் முன்னால் ஆஜர்படுத்தப்பட்டனர். வரும் 7 ஆம் தேதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

'இவர்கள் இலங்கையில் இருந்தபடியே சீனாவில் இருக்கும் சீனர்களின் வங்கிக் கணக்குகளுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். மக்களிடம் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளீர்கள் ஆகவே அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறி ஒரு குறிப்பிட்ட கணக்கில் பணத்தை செலுத்துமாறு செய்துள்ளனர். மொத்தமாக 4 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இவர்கள் மோசடி செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது' என காவல்துறைப் பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

சீனக் காவல்துறை இது தொடர்பாக ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில்தான் இலங்கைக் காவல்துறை இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் சீனாவின் முதலீட்டில் நடந்துவரும் அபிவிருத்தி கட்டுமானப் பணிகளில் சீனத் தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டுள்ளனர்.

சீனாவின் கடனுதவி மூலம் கட்டப்பட்ட துறைமுகமொன்று இலங்கையின் தெற்கே அண்மையில் திறந்துவைக்கப்பட்டது.

இன்னொரு துறைமுகத்தை கொழும்பில் நிர்மானிப்பதற்கும் சீன நிறுவனங்கள் நிதியுதவி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.