'நீதித்துறை சுதந்திரத்தை உறுதி செய்யுங்கள்': ஷிராணி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 டிசம்பர், 2012 - 16:40 ஜிஎம்டி
சட்டத்துறையும் நிறைவேற்றுத்துறையும் ஒட்டுமொத்த சமூகமும் நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிசெய்ய வேண்டும்: தலைமை நீதியரசர்

'சட்டத்துறையும் நிறைவேற்றுத்துறையும் ஒட்டுமொத்த சமூகமும் நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிசெய்ய வேண்டும்': தலைமை நீதியரசர்

இலங்கையில் நீதிபதிகளின் வருடாந்த மாநாடு கொழும்பில் இன்று சனிக்கிழமை நடந்தது.

அங்கு சிறப்புரையாற்றிய நாட்டின் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, 'ஜனநாயம் என்ற ஒன்று இருக்க வேண்டுமானால் ஒரு நாட்டில் நீதித்துறை சுதந்திரமாக இயங்க வேண்டும்' என்று கூறினார்.

நாட்டிலுள்ள எல்லா பிரஜைகளும் சமமாக நடத்தப்படும் அளவுக்கு எல்லா மட்டங்களிலும் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டாலே நீதித்துறை சுதந்திரமும் உறுதிப்படுத்தப்படும் என்றும் ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் சாதாரண சட்டங்களுக்கு கட்டுப்படும் சட்டத்தின் ஆட்சி கடைப்பிடிக்கப்படாது போனால் ஒரு அரசின் நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று கூறுகளும் உருப்படியாக இயங்கமுடியாமல் போகும் என்றும் அதனால் சட்டத்தின் முன் யாவரும் சமம் என்கின்ற அடிப்படை சமத்துவ கோட்பாடு மீண்டும் சீர்செய்ய முடியாதளவுக்கு பாதிக்கப்பட்டு விடும் என்றும் ஷிராணி கூறினார்.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள எந்தவொரு நபருக்கும், தன் தரப்பு வாதத்தை முன்வைக்குமளவுக்கு முறையான சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் ஷிராணி பண்டாரநாயக்க நாட்டின் நீதிபதிகளின் முன்னால் வலியுறுத்தினார்.

ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவிக்கு வேறு எவரும் வந்தால் புறக்கணிப்போம் என்று சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவிக்கு வேறு எவரும் வந்தால் புறக்கணிப்போம் என்று சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

'அரசியலமைப்பின் 13-ம் சரத்தின் 3-ம் உப பிரிவின் படி, குற்றச்சாட்டொன்றை எதிர்நோக்கியுள்ள எந்தவொரு நபருக்கும் முறையான நீதிமன்றமொன்றின் முன்னால் நீதியான விசாரணை கிடைக்க வேண்டும் என்ற உரிமை' உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளதை தலைமை நீதியரசர் சுட்டிக்காட்டினார்.

நீதிபதிகள் எவ்வித சலனமும் இன்றி எவ்வித அழுத்தங்களும் இன்றி பாதுகாப்பாக செயற்பட முடிந்தால் தான் நீதி உரியமுறையில் உறுதிப்படுத்தப்படும் என்று கூறிய ஷிராணி, நீதிபதியொருவர் அச்சமோ பக்கச்சார்போ இல்லாமல் எல்லா வகையான அழுத்தங்களிலுமிருந்து விடுபட்டவராக இருக்கவேண்டுமானால் நாட்டின் சட்டத்துறையும் நிறைவேற்றுத் துறையும் அதனை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் நீதித்துறைக்கும் நிறைவேற்றுத்துறைக்கும் இடையிலான முறுகல்நிலை முற்றி மோதலாக மாறிவருகின்றமை குறித்து அண்மைக் காலங்கள் அவதானிகள் பலரும் விமர்சனங்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீது அரசாங்கம் கொண்டுவந்துள்ள பதவிநீக்கக் கண்டனத் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டுமென்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

தன்மீதான தெரிவுக்குழுவின் தீர்ப்புக்கு எதிராக ஷிராணி பண்டாரநாயக்க தாக்கல்செய்துள்ள வழக்கு தொடர்பில் நாடாளுமன்றத்தின் சபாநாயகருக்கும் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கும் இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.