சுனாமி வீடுகளைக் கோரி அம்பாறை முஸ்லிம்கள் போராட்டம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 டிசம்பர், 2012 - 17:00 ஜிஎம்டி

2004-ஆம் ஆண்டு சுனாமியின் போது இருப்பிடங்களை இழந்த தங்களுக்காக நுரைச்சோலையில் அமைக்கப்பட்ட வீடுகளை வழங்கக்கோரி அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேச முஸ்லிம்கள் இன்று புதன்கிழமை வீதியில் இறங்கி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹெல உறுமய தாக்கல் செய்த வழக்கு காரணமாக வீடுகளை முஸ்லிம்களுக்கு மட்டும்யளிப்பதில்

ஹெல உறுமய தாக்கல் செய்த வழக்கு காரணமாக வீடுகளை முஸ்லிம்களுக்கு மட்டும் கையளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

சுனாமியின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் 8வது ஆண்டு நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலே இந்த ஆர்பாட்டமும் நடைபெற்றுள்ளது.

இந்தப் பிரதேச முஸ்லிம்களுக்கென சவுதி அரேபிய அரசாங்கத்தினால் நுரைச்சோலை என்னுமிடத்தில் 500 வீடுகள் நிர்மாணிக்கப்படடன.

தங்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளை தமக்கு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தைக் கண்டித்தும் வீடுகளை தமக்கு வழங்கக் கோரியும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மக்கள் கல்முனை-அக்கறைப்பற்று பிரதான நெடுஞ்சாலையின் குறுக்கே அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக சில மணிநேரம் அவ்வழியாக போக்குவரத்திலும் தடை ஏற்பட்டது.

பிரதேச செயலாளரும் மாவட்ட காவல்துறை அத்தியட்சகரும் விரைந்து ஆர்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வழங்கிய உறுதிமொழியின் பேரில் பிற்பகலுடன் ஆர்பாட்டம் முடிவுக்கு வந்தது.

'21 நாள் அவகாசம்'

நுரைச்சோலையில் பல ஆண்டுகளாக கைவிடப்பட்டுக் கிடக்கும் வீடுகள்

நுரைச்சோலையில் பல ஆண்டுகளாக கைவிடப்பட்டுக் கிடக்கும் வீடுகள்

21 நாள் கால அவகாசத்திற்குள் தீர்வு பெற்றுத்தருவதாக காவல்துறை அத்தியட்சகரினால் தங்களுக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டதாகவும் அதனையடுத்தே ஆர்பாட்டத்தை தாம் கைவிட்டதாகவும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

நீதிமன்ற தீர்ப்பு காரணமாக எழுந்துள்ள சட்டப் பிரச்சினையே பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வீடுகள் வழங்குதலில் ஏற்பட்டுள்ள தாமதங்களுக்கு காரணம் என்று பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் கூறினார்.

இது தொடர்பாக சட்டமா அதிபர் தினைக்களத்தின் உதவியை அரசாங்க அதிபர் நாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பாடசாலைகள், மருத்துவமனை, மசூதி, சந்தை உட்பட இஸ்லாமியர்களின் வாழ்விடமொன்றின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த வீடமைப்பு தொகுதி 64 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டது.

இந்த வீடுகள் சுனாமியினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்படவிருந்தவேளை, ஜாதிக ஹெல உறுமய கட்சி தாக்கல் செய்த வழக்கொன்றின்படி, மாவட்ட இன விகிதாசார அடிப்படையில் வீடுகளை வழங்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டிருந்தது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.