'இறத்தோட்டையில் இடம்பெயர்ந்தவர்களில் 200 குடும்பங்கள் மீளக்குடியேற முடியவில்லை'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 டிசம்பர், 2012 - 15:37 ஜிஎம்டி

இலங்கையில் மாத்தளை மாவட்டத்தில் இறத்தோட்டை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் நீரிடி போன்றவை காரணமாக வீடுகளை இழந்த சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தமது இருப்பிடங்களில் மீளக்குடியேற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான மழை காரணாக இங்கு மண்சரிவு மற்றும் நீரிடி ஏற்பட்டு அதனால் சுமார் 14 பேர் வரை அங்கு இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. இதுவரை 4 பேரது சடலங்கள் மீட்கப்பட்டாலும், ஏனையவர்களைத் தேடும் பணிகள் தொடருகின்றன.

இறந்தவர்களில் 3 மாணவர்களும் அடங்குவதாகக் கூறப்படுகின்றது.

இதேவேளை, அந்தப் பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்படக் கூடிய இடங்கள், ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்புகளால் கற்கள் நிறைந்து காணப்படும் இடங்கள் மற்றும் வீடுகளின் தடங்கள் இழந்துபோய் இருக்கும் இடங்களில் மக்களை மீளக்குடியேற்ற முடியாத நிலைமைக்கு அப்பகுதி பிரதேச நிர்வாகம் முகம்கொடுத்துள்ளதாக அங்கு உதவிப்பணிகளில் ஈடுபடுபவர்களில் ஒருவரான கந்தேநுவர புனித பிரான்ஸிஸ் பாலர் பாடசாலையின் அதிபரான எம். சுப்பையா கூறுகிறார்.

இப்படியாக சுமார் 200 குடும்பங்கள் தமது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் இருப்பதாகவும், அவற்றுக்கு வேறு இடங்களை குடியிருப்பதற்காக தேடவேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதனால் பலர் இன்னமும் பள்ளிக்கூடங்கள் போன்ற பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.