வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் விஜயம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 டிசம்பர், 2012 - 15:41 ஜிஎம்டி

இலங்கையின் வடக்கே மழையினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு வார காலத்திற்கு சமைத்த உணவு வழங்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.

பொது இடங்களில் தஞ்சமடைந்திருந்தாலும், வீடுகளில் சமைக்க முடியாத அளவில் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இந்த உதவி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

சமைத்த உணவு வழங்கப்பட்டதன் பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு வழங்கப்படுகின்ற உலர் உணவுப் பொருள் விநியோகத்தை மேலும் இரண்டு வராங்களுக்கு நீடிக்க வேண்டும் என்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிட்டிருக்கின்றார்.

வடபகுதிக்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் மகிந்த அமரவீர, வவுனியா, மன்னார் மாவட்டங்களின் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகளையும், அவர்களுக்கான அரசாங்கத்தின் உதவிகள் எந்த வகையில் கிடைத்திருக்கினற்ன என்பது பற்றியும் கேட்டறிந்தபோதே இந்த உத்தரவுகளை வழங்கியிருக்கின்றார்.

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும், மழை வெள்ளம் காரணமாக 30 ஆயிரத்து 220 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 344 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்திருக்கின்றது. ஞாயிற்றுக்கிழமை மதியம் வரையிலான காலப்பகுதிக்குள் மழை வெள்ளம் காரணமாக நாடெங்கிலும், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 204 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து ஆயிரத்து 988 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களில் 11 ஆயிரத்து 302 குடும்பங்களைச் சேர்ந்த 39 ஆயிரத்து 191 பேர் 242 நிலையங்களில் தஞ்சமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்திருக்கின்றது. மழையினாலும் வௌள்த்தினாலும், இதுவரையில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். ஏழு பேருக்கு என்ன நடந்து என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியிருக்கின்றது.

தாழ்ந்த நிலப்பகுதிகளில் வீடுகளை அமைத்திருப்பவர்கள் வருடந்தோறும் மழைவெள்ளததினால் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக அவர்களது குடியிருப்புக்களை அங்கிருந்து மாற்றி மேட்டுப்பாங்கான இடங்களில் காணிகளை வழங்கி குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கின்றரர்.

தாழ்ந்த நிலப்பகுதிகளில் உள்ள காணிகளை, உரிமையாளர்கள் விவசாயத் தேவைக்கு மாததிரம் பயன்படுத்தலாம் என்றும்,அரசாங்கம் வழங்குகின்ற காணிகளில் வீடமைப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு வழங்குகின்ற ஒரு லட்ச ரூபா நிதியுதவியையும், வேறு வகையான உதவிகளைக் கொண்டும் அவர்கள் வீடுகளை அமைத்து குடியிருக்கலாம் என்றும் தெரிவித்திருக்கின்றார்.

அமைச்சரின் இந்த ஏற்பாட்டை, பாதிக்கப்பட்ட மக்கள், கொள்கையளவில் ஏற்றுக்கொண்ட போதிலும், பெரும் தொகைப் பணத்தைச் செலவு செய்து கட்டி தற்போது குடியிருக்கின்ற வீடுகளை உடைத்துவிட்டு புதிய வீடுகளை அமைசசு வழங்குகின்ற ஒரு லட்ச ரூபா நிதியுதவியில் கட்ட முடியாது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் வெள்ளம் காரணமாகத் துண்டிக்கப்பட்டுள்ள முள்ளிக்குளம் மறிச்சுக்கட்டி, குஞ்சுக்குளம், சன்னார் போன்ற இடங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் தமக்குரிய நிவாரண உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இனனும் உரிய முறையில், உரியஅளவில் வந்து சேரவில்லை என கூறியிருக்கின்றார்கள்.

இது பற்றி கேள்வியெழுப்பிய செய்தியாளர்களிடம் பதிலளித்த அமைச்சர், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை ஜனாதிபதியும், அமைச்சர்கள், அதிகாரிகளும் நேரடியாகப் பார்வையிட்டு, அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றார்கள் என்றும், இவ்வாறான உதவிகளுக்குத் தேவையான நிதியை அரசாங்கம் வழங்கியிருப்பதாகவும, பாதிக்க்பபட்ட மக்களுக்குரிய உதவிகளை வழங்காதிருக்கும் அதிகாரிகளுக்கு எதிரான விசாரணைகள் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.