இலங்கை நீதித்துறை குறித்து ஐ நா சிறப்பு பிரதிநிதி கவலை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 1 ஜனவரி, 2013 - 14:25 ஜிஎம்டி

ஐ நா சிறப்பு பிரதிநிதி கேப்ரியேலா கனூல்

இலங்கையில் நீதிபதிகளும்,நீதித்துறை அதிகாரிகளும் கூடுதலான அச்சுறுத்தல் மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகின்ற சம்பவங்கள், நீதித்துறையின் சுயாதீனத் தன்மைக்கு ஊறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக் கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி கவலை வெளியிட்டுள்ளார்.

தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க மீது கொண்டு வரப்படுள்ள பதவி நீக்க நடவடிக்கைகள் குறித்து கவலை வெளியிடும் போதே, நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் சுதந்திரத்துக்கான ஐ நா வின் சிறப்பு பிரதிநிதி கேப்ரியேலா கனூல்இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கையில் நிர்வாகத்துறையும், நாடாளுமன்றமும் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்ய எடுத்து வரும் முயற்சிகள், அங்கு நீதித்துறை மீது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தாக்குதலில் உச்சகட்டம் என்றும் கேப்ரியேலா கனூல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

"தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மறு பரீசலனை செய்யப்பட வேண்டும்"

கேப்ரியேலா கனூல்

நீதிதுறை தனது சுயாதீனத்தை உறுதிப்படுத்த முன்வந்ததாலேயே, அதன் மீதான தொடர் தாக்குதல்களுக்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களில் வழக்கறிஞர்களின் மீதான தாக்குதலும், அவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்களும், அவர்களின் பணிகளில் தலையிடுவதும் என்னிப்பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஷிராணி பண்டாரநாயக்க மீதான விசாரணைகள் தெளிவில்லாமல் இருந்தது எனவும் நியாயமான ஒரு விசாரணைக்கான அடிப்படை உத்திரவாதங்கள் கூட மதிக்கப்படாமல் இருந்தன எனவும் கனூல் அவர்கள் கூறுகிறார்.

"அரசியல் சாசனத்தில் மாற்றம் தேவை"

சட்டத்துறையை காப்பாற்ற மக்கள் போராட்டம்

இலங்கை அரசியல் சாசனத்தின் 107 ஆவது சட்டப் பிரிவு, மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் உத்தரவு ஆகிய இரண்டையும் இணைத்து பார்க்கும் போது, அது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துக்கு புறம்பாக உள்ளது என்றும், இது 2003 ஆம் ஆண்டே மனித உரிமைகள் குழுவால் சுட்டிக்காட்டப்பட்டது எனவும் அவரது அறிக்கை தெரிவிக்கிறது.

இலங்கையில் நீதிபதிகளின் சுயாதீனத் தன்மையை பாதுகாக்கவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை தவிர்க்கவும், நாட்டின் அரசியல் சாசனத்தில் மாற்றம் தேவை எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

நீத்தித்துறை சுயாதீனத்தை பாதுகாக்க பல்தரப்பினரும் கோரிக்கை

நாட்டில் ஒவ்வொரு துறையும் தனி அதிகாரத்துடன் செயல்படும் வகையிலும், சர்வதேச மனித உரிமைகளை பாதுகாக்கும் நோக்கிலும், நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும் போது அது சுயாதீனமான ஒரு ஆணயத்தால் நேர்மையாக நடத்தப்பட்டு, அது மதிக்கப்பட வேண்டும் எனவும் கேப்ரியேலா கனூல் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தலைமை நீதிபதியை பதவி நீக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ள கனூல், நீதித்துறை எவ்விதமான வெளி அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள், தலையீடுகள் இல்லாத வகையில் செயல்பட வழி ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.