வடக்கு கிழக்கில் அறுபதினாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இடையில் விலகினர்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 ஜனவரி, 2013 - 16:46 ஜிஎம்டி

இலங்கையின் வடக்கே யுத்தத்தின் பின்னர் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.

கடந்த 2011 ஆம் ஆண்டில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் ஒரு லட்சத்து இருபத்தாறாயிரம் மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியிருப்பதாகக் கல்வி அமைச்சு தெரிவித்திருக்கின்றது.

இதில் அதிகூடிய எண்ணிக்கையாக 38 ஆயிரத்து 321 மாணவர்கள் வடமாகாணப் பாடசாலைகளில் இருந்து இடையில் விலகியிருப்பதாகவும், கிழக்கு மாகாத்தில், 24 ஆயிரத்து 614 மாணவர்கள் இடையில் விலகியிருப்பதாகவும் கல்வி அமைச்சு கூறியிருக்கின்றது.

நாட்டில் இலவச கட்டாயக் கல்வி நடைமுறையில் இருக்கின்ற போதிலும், பாடசாலைகளில் இடை நிலை வகுப்புகளில் இருந்து மாணவர்கள் இடைவிலகிச் செல்வது கவலைக்குரியது என சேவ் த சில்ரன் என்ற சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த மேனகா கல்யாணரட்ன அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறுமை காரணமாகவே மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகிச் செல்வதாக ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டிருக்கின்றது.

வறுமையில் வாடும் குடும்பங்களில் சிறுவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

பாடசாலைகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாதிருப்பது, ஏனைய அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமலிருப்பது போன்ற காரணங்களினாலும், மாணவர்கள் இடையில் தமது கல்வியைக் கைவிட்டுச் செல்கின்றனர் என்றும் மேனகா கல்யாணரட்ன அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

வடமாகாணத்தில் யாழ் குடாநாட்டில் பாடசாலைகளில் இருந்து பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் இடைவிலகியிருப்பது அதிர்ச்சியளிக்கத்தக்க விடயம் என கூறியுள்ள யாழ் வணிகர் கழகம், இடை விலகியுள்ள மாணவர்கள் மீண்டும் தமது கல்வியைத் தொடர்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றது.

இது குறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்ட யாழ் வணிகர் கழகத் தலைவர் ரட்னலிங்கம் ஜெயசேகரன், யாழ் அரச அதிபர் மற்றும் பிரதேச அரச அதிகாரிகளின் உதவியோடு முதல் கட்டமாக 491 மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியிருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகள் வழங்கப்பட்டு பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

'அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் தொழில் வாய்ப்பு பெறுவதற்குக் குறைந்த பட்சமாக கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை அல்லது உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும். இதனால், இடைநிலை வகுப்புக்களில் இருந்து கல்வியைக் கைவிடுபவர்கள் எதிர்காலத்தில் தொழில்வாய்ப்பைப் பெற முடியாமல் போவதுடன், அவர்களது வாழ்க்கையும் கேள்விக்குறிக்கு உள்ளாகிவிடும். இதன் காரணமாகத்தான் இடைவிலகுகின்ற மாணவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர்வதற்குரிய நடவடிக்கைகளை யாழ் வணிகர் கழகம் எடுத்திருக்கின்றது' என்றும் யாழ் வணிகர் கழகத் தலைவர் கூறினார்.

இதனிடையில் பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் இடைவிலகுவதைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதனையடுத்து 2012 ஆம் ஆண்டில் மாணவர்களின் இடைவிலகல் வீதம் குறையத் தொடங்கியிருப்பதாகவும் கல்வி அமைச்சு கூறியிருக்கின்றது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.