இலங்கையில் சர்ச்சைக்குரிய திவிநெகும சட்டம் நிறைவேறியது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 ஜனவரி, 2013 - 19:03 ஜிஎம்டி

இலங்கையில் சர்ச்சைகுரியதாக கருதப்பட்டதும் ,உச்ச நீதிமன்றத்தால் திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த திவிநெகும(வாழ்வெழுச்சி) சட்ட மூலம் செவ்வாய்க்கிழமையன்று(8.1.13)நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றம்

இந்த சட்ட மூலத்தை அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.

ஆளும் கூட்டணி, ஜக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி என்கின்ற ஜே.வி.பி, மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டனர்.

நாட்டிலுள்ள நலிவடைந்த மக்களுக்கான உதவிகளை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சகத்தின் மூலம் நேரடியாக அமல் செய்ய திவிநெகும சட்டம் வழி செய்கிறது.

ஆனால் திவிநெகும சட்டம் மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

இந்த மசோதா மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக 160 வாக்குகளும், எதிராக 53 வாக்குகளும் பதிவாயின. 11 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஈபிடிபி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் உறுப்பினர் பிரபா கணேசன் ஆகியோர் இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதன் மூலம் இந்த சட்ட மூலம் 107 கூடுதல் வாக்குகளால் சபையில் நிறைவேறியது.

ஜக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி.மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்தன.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.