தலைமை நீதிபதி பதவிநீக்கத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 ஜனவரி, 2013 - 14:55 ஜிஎம்டி
இலங்கை நாடாளுமன்றம்

இலங்கை நாடாளுமன்றம்

இலங்கையின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான கண்டன பதவிநீக்கத் தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

நாடாளுமன்ற அவையில் நடந்த வாக்கெடுப்பில் பதவிநீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்து 155 வாக்குகளும் எதிர்த்து 49 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

எனவே மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேறியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரும்பான்மை வகிக்கும் நாடாளுமன்றத்தில் அரசாங்கம் முன்னெடுத்த இந்த கண்டன பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேறியிருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

இலங்கையின் உச்சநீதிமன்றமும் மேன்முறையீட்டு நீதிமன்றமும் வழங்கிய உத்தரவுகளை மீறி அரசாங்கம் இந்த கண்டன பதவிநீக்க தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பை நடத்தியுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறிய பின்னரும், தலைமை நீதிபதியை பதவி நீக்குவதில் இறுதி முடிவு எடுக்கின்ற அதிகாரம் ஜனாதிபதியிடம்தான் உள்ளது.

அமெரிக்கா கவலை

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி தலைமை நீதிபதிக்கு எதிராக நடந்த கண்டனப் பதவி நீக்கத் தீர்மானம் குறித்து தாம் மிகவும் கவலையைடந்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் வாக்கெடுப்பு நடந்த ஒரு சில நிமிடங்களில் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையே இருக்கும் அதிகாரப் பகிர்வு குறித்த கேள்விகளை இவ்விவகாரம் எழுப்பியுள்ளதாக கூறியுள்ளது.

அமைதிகரமான ஆர்பாட்டங்களை நடத்த அனைவருக்கும் இருக்கும் உரிமையை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அமெரிக்க தூதரகம், அமைதியான முறையில் ஆர்பாட்டம் செய்வோரின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுள்ளது.

இலங்கை அரசு சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும் மதிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான இந்த நடவடிக்கையை பல்வேறு சிவில் சமூக அமைப்புகளும் கண்டித்துள்ளன.

அரசாங்க ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

அதேநேரம் அரசாங்கத்துக்கு ஆதரவானவர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். இந்த நடவடிக்கையை கொண்டாடும் விதமாக ஷிராணியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வெளியே அவர்கள் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.