'நான் தான் இன்னும் சட்டரீதியாக நியமிக்கப்பட்ட தலைமை நீதியரசர்'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 ஜனவரி, 2013 - 12:49 ஜிஎம்டி
இலங்கையின் 43-வது தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க

இலங்கையின் 43-வது தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க

'நான் எனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அல்லது அலுவலக அறையில் தொடர்ந்தும் இருப்பேனானால் வன்முறைகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் இப்போது தென்படுவதால் சட்டத்தரணிகள் மற்றும் விசுவாசமான சாதாரண பிரஜைகள் உட்பட்ட அப்பாவி பொதுமக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதால் நான் எனது உத்தியோகபூர்வ வாஸஸ்தலத்திலும் அலுவலக அறையில் இருந்தும் வெளியேறும் நிலைக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன்' என்று இலங்கையின் 43-வது தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் புதிய தலைமை நீதியரசராக மொஹான் பீரிஸ் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னால் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள சூழ்நிலையில், ஷிராணி பண்டாரநாயக்க ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

'பாராளுமன்ற தெரிவுக்குழு மூலம் எதேச்சாதிகாரமாகவும் தன்னிச்சையாகவும் குற்றவாளியாக்கப்பட்டாலும் நான் சட்டரீதியானமுறைகள் மூலம் அதனை முகங்கொடுத்துள்ளேன் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. நான் நம்பிக்கை வைத்திருக்கின்ற இயற்கை நீதிக்கோட்பாடு மற்றும் சட்டரீதியான நடவடிக்கை முறைகள் தொடர்பில் நம்பிக்கை கொண்டு ஆரம்பம் முதல் அதனை நிலைநிறுத்தி உயர் நீதிமன்றங்களிலும் உறுதி செய்தேன்' என்று ஷிராணி கூறியுள்ளார்.

'குற்றச்சாட்டுக்கள் எல்லாம் படுபொய்கள்'

'கௌரவ சபாநாயகர் அவர்கள் அரசியலமைப்பை வியாக்கியானம் செய்வதற்கு தனிமையானதும் புறநீங்கலானதுமான நியாயாதிக்கம் உயர்நீதிமன்றத்திற்கு உண்டு என்பதை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் உயர்நீதிமன்றத்தின் கடந்த வியாக்கியானத்தில் பாராளுமன்ற தெரிவுக்குழுவும் அதன் நடவடிக்கை முறைகள் யாவும் சட்டவிரோதமானது எனவும் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்மானம் உறுதிகேள் எழுத்தாணை மூலம் ரத்துச் செய்யப்பட்டு செல்லுபடியற்றதாக்கப்பட்டது. ஆகவே பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்மானம் எதுவித வலுவோ அதிகாரமோ அற்றதும் சட்டரீதியான நியாயாதிக்கமின்றி மேற்கொள்ளப்பட்டதென்ற அடிப்படையில் செல்லுபடியற்ற ரத்துச் செய்யப்பட்ட தீர்மானமாகும்' என்று ஷிராணி பண்டாரநாயக்க தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

'இந்த சூழ்நிலையில் ஓர் ஜனநாயக நாடான எனது நாடு – இலங்கை சட்ட ஆட்சியை திறவுகோளாகக் கொண்டு உரிமைகளை நிலைநிறுத்துகின்ற ஓர் தேசம்; அதில் நான் தான் இன்னும் சட்டரீதியாக நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசர்' என்று இலங்கையின் 43-வது தலைமை நீதியரசர் தெரிவித்துள்ளார்.

'பிரதம நீதியரசர் என்ற பதவி மட்டுமல்ல நீதித்துறையின் சுதந்திரத்திற்கே பங்கம் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது. சட்ட ஆட்சி, இயற்கை நீதி, நீதித்துறை சுதந்திரம் என்பன தூக்கியெறிப்பட்டிருக்கின்றன, காட்டுமிராண்டித்தனமாக சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளன' என்கிறார் ஷிராணி பண்டாரநாயக்க.

'எனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பான படுபொய்கள்; குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் அனைத்திலிருந்தும் நான் குற்றமற்றவர் மட்டுமன்றி என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் ஒரு சிறுதுளி உண்மைகூட இல்லை. மேற்கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களில் எதும் உண்மை தென்பட்டிருந்தால் நான் ஒரு கணம் கூட இந்த மகிமைமிகு பிரதம நீதியரசர் பதவியில் நீடித்திருந்திருக்கமாட்டேன்' என்று ஷிராணி பண்டாரநாயக்க ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.