மொஹான் பீரீஸுக்கு வரவேற்பு-வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 ஜனவரி, 2013 - 12:01 ஜிஎம்டி

தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற போது எடுத்த படம்

இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள மொஹான் பீரீஸை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வை இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் புறக்கணித்துள்ளது.

அவருக்கான சம்பிரதாய ரீதியிலான வரவேற்பு இன்று-புதன்கிழமை(23.1.13) கொழும்பு உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இவ்வகையான நிகழ்வில் புதிய தலைமை நீதிபதியை வரவேற்று வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரும், சட்டமா அதிபரும் உரையாற்றுவது வழக்கமான முறையாகும் என அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் கே எஸ் உதயகுமார் கூறுகிறார்.

எனினும் இன்றைய நிகழ்வில் இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் விஜயதாஸ் ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை.

வழக்கறிஞர்கள் சங்கத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியே தான் இன்றைய நிகழ்வை புறக்கணித்ததாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

சட்டவிரோதமான வகையில் புதிய தலைமை நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டால், அவரை வரவேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிப்பது என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் நிகழ்ச்சியை புறக்கணித்தாலும், விழாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று வழக்கறிஞர் எம் எம் சுபைர் கூறுகிறார்.

இவ்விழாவில், பல மூத்த வழக்கறிஞர்கள் கூட பங்குபெற்றனர் எனவும் அவர் கூறுகிறார்.

இலங்கை அனைத்து இன மக்கள் சமத்துவமாக வாழும் ஒரு நாடு எனவும், அதன் அடிப்படையிலேயே தாம் செயலாற்றவுள்ளதாகவும் தலைமை நீதிபதி மொஹான் பீரீஸ் தமது ஏற்புரையில் தெரிவித்தததாகவும் சுபைர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த விழாவில் உச்ச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.