கைது செய்யப்பட்டிருந்த யாழ் மாணவர்கள் விடுதலை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 13 பிப்ரவரி, 2013 - 11:16 ஜிஎம்டி

விடுவிக்கப்பட்டுள்ள மாணவர் தர்ஷானந்த்

இலங்கையில் படையினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் புதனன்று(13.2.12) வவுனியாவில் வைத்து அவர்களது பெற்றோரிடம் பல்கலைக்கழகத்தின் முக்கிய பேராசிரியர்கள் முன்னிலையில் கையளிக்கப்பட்டிருக்கின்றனர்.

யாழ் பல்கலைக்கழக ஒன்றியச் செயலாளர் பி.தர்ஷானந்த் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் கே.ஜெனமேஜயந்த் ஆகிய இருவருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவர்கள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் அந்த மாணவர்களின் பெற்றோர் செவ்வாயன்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

மாணவர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களுக்கும் பொலிசாருக்கும் மோதல்கள் ஏற்பட்டன.

அந்த கோரிக்கையை ஏற்று அவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு அவிடத்திலேயே உத்தரவிட்டிருந்ததையடுத்தே அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மாவீரர் தின நிகழ்வையொட்டி, யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களையடுத்து கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள்.

அவர்களில் இருவர் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.

படையினரிடம் முறையிட்ட பெற்றோர்

கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலைக்காக பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பல்வேறு வழிகளில் பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் பல்வேறு பல்கலைக்கழகங்களின் மாணவர் அமைப்புக்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர், பொது அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல்வாதிகள், தொழிற்சங்கத்தினரும் இவர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.