எதிரணிகளின் யாழ். போராட்டத்தின்போது குழப்பம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 பிப்ரவரி, 2013 - 16:31 ஜிஎம்டி
எதிரணி மற்றும் தமிழ்த் தலைவர்களுடன் ரணில் விக்ரமசிங்க

எதிரணி மற்றும் தமிழ்த் தலைவர்களுடன் ரணில் விக்ரமசிங்க

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் படையினர் நிலைகொண்டுள்ள தமது நிலங்களைத் தம்மிடம் ஒப்படைக்கும்படியும், அங்கு இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றக் கோரியும் தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்தப் பேராட்டத்தை வலி வடக்கு மீள்குடியேற்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன ஆகியோரும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு அமைப்பு, காணாமல் போனோரைத் தேடிக் கண்டறியும் குழு ஆகிய அமைப்புக்களுடன் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் அமைப்புக்களைச் சேர்ந்தோரும் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், எஸ்.சிறிதரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோருடன் யாழ் மாவட்டம் மற்றும் முல்லைத்தீவு, கிளிநொச்சி பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

ரணில் உரை

இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, '1990 ஆம் ஆண்டு பலாலி விமானத்தள பாதுகாப்பிற்காக அதனைச் சூழ்ந்த பிரதேசத்தை அப்போதைய அரசாங்கம் அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தியிருந்தது. யுத்தம் முடிவடைந்ததும் அந்தப் பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று அப்போதைய அரசாங்கம் உறுதியளித்திருந்தது. எனினும் யுத்தம் முடிவடைந்து மூன்றரை வருடங்களாகிவிட்ட போதிலும், இந்த அரசாங்கம் அந்தப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்யவில்லை. மாறாக பொது மக்களின் காணிகளை கைப்பற்றவும் அவற்றை தனவந்தர்களுக்கு வழங்குவதிலுமே ஆர்வமாகச் செயற்பட்டு வருகின்றது' என்று அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தினார்.

இந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்பதைத் தொடர்ச்சியாக தான் வலியுறுத்தி வந்துள்ள போதிலும், அரசாங்கம் அதனைக் கருத்திற் கொள்ளவில்லை என்று கூறிய ரணில் விக்கிரமசிங்க, இத்தகைய மக்கள் போராட்டத்தின் ஊடாகவே அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதன் ஊடாக அரசிடமிருந்து மக்களின் காணிகளைத் திரும்பப் பெற முயற்சிக்க வேண்டும். இதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்தார்.

கூட்டத்தில் குழப்பம்

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பெண்களை அச்சுறுத்திய நபர்கள் துரத்தப்பட்டனர்

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பெண்களை அச்சுறுத்திய நபர்கள் துரத்தப்பட்டனர்

ரணில் விக்கிரமசிங்க தனது உரையை முடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியபோது, அடையாளம் தெரியாத சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை குறிப்பாகப் பெண்களை அச்சுறுத்தி அங்கிருந்து வெளியேறிச் செல்லுமாறு கூறினர். இதனையடுத்து அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.

அதேநேரம், குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை அங்கு குழுமியிருந்தவர்கள் பிடிக்க முயன்றபோது அவர்கள் ஓடிச்சென்றனர். ஆவர்களைத் துரத்திச் சென்றவர்கள் ஒருவரைப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது அங்கு வந்த படையினர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் செய்தித்தாளின் செய்தியாளர் ஒருவருடைய வீடியோ கமராவை பறித்து சேதப்படுத்தியதுடன் பிரதேச சபைத் தலைவர் ஒருவரும் செய்தியாளர் ஒருவரும் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

இருப்பினும் குழப்ப நிலையைக் கட்டுப்படுத்தி ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை மாலை வரை நடத்தி முடித்தனர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.