சம்பூரில் நவரட்ணபுரம் கிராமத்தில் மட்டும் மீளக்குடியேற அனுமதி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 பிப்ரவரி, 2013 - 19:48 ஜிஎம்டி
7 ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் தங்களின் சொந்தக் காணிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு நீண்டகாலமாக கோரிவருகின்றனர்.

7 ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் தங்களின் சொந்தக் காணிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு நீண்டகாலமாக கோரிவருகின்றனர்.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் போர் நடந்த சமயத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட சம்பூர் பிரதேசத்தில், போரின்போது இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தம் சொந்த இடங்களுக்கு குடியேறுவது என்பது தீராத பிரச்சினையாக இருந்து வந்திருக்கிறது.

இந்த நிலையில் இப்போது, இந்தப் பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் கிராமவாசிகள் மீண்டும் வந்து குடியேறலாம் என்று அரசு அனுமதித்திருப்பதாக மூதூர் பிரதேச இடம்பெயர்ந்தோர் நலன்புரி சங்கத்தின் தலைவர் குமாரசாமி நாகேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சம்பூர் பிரதேசத்திலிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெயர்ந்த ஆயித்து 224 குடும்பங்கள் இன்னும் சொந்தக் காணிகளில் குடியமர்த்தப்படாமல் தற்காலிக முகாம்களிலேயே இருந்துவருகின்றன.

சம்பூர் பிரதேசத்தின் நான்கு கிராமசேவகர் பிரிவுகளில் ஒன்றான நவரட்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் மீண்டும் குடியேற அனுமதிப்பதற்கு, மக்களின் கடும் முயற்சிகளின் பின்னர் அரசு முன்வந்திருப்பதாக நாகேஸ்வரன் கூறினார்.

தற்போது நவரட்ணபுரம் கிராமத்தில் உள்ள தங்களின் சொந்தக் குடிமனைகளை 7 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்று பார்க்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அங்கு தமது குடியிருப்புகள் அழிந்து பற்றைக் காடுகள் மண்டியிருப்பதாகவும் அங்கு சென்று வந்தவர்கள் கூறியுள்ளனர்.

எனினும் நவரட்ணபுரம் கிராம மக்கள் பாதைகள், பள்ளிக்கூடம் மற்றும் வாழ்வாதாரத் தேவைகளுக்காக அண்டைக் கிராமங்களில் தங்கியிருக்க வேண்டியிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

எனவே சம்பூர் பிரதேசத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் தம்மைக் குடியேற அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

சம்பூர் பகுதியில் இந்திய உதவியில் அனல்மின் நிலையம் அமையவுள்ளதாகக் கூறியே பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் மீளக்குடியமர்த்தப்படாது இருப்பதாக அதிகாரிகள் கூறிவந்தமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.