இலங்கை விவகாரம் : 'இந்திய ஜனாதிபதியின் உரை தமிழர் உணர்வை பிரதிபலிக்கவில்லை'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 பிப்ரவரி, 2013 - 14:16 ஜிஎம்டி

இலங்கைப் பிரச்சனை தொடர்பாக இந்திய ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் கூறிய விடயங்கள் தமிழர்களின் இதய வேதனையை எதிரொலிப்பதாக இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

உலக நாடுகள் “ராஜபக்ஷ ஒரு சர்வதேசப் போர்க் குற்றவாளி” என்று கடுமையாகக் கண்டிக்கவும் தண்டிக்கவும் முற்படுகின்ற வேளையில், இந்திய அரசு மட்டும் அவரைப் பற்றிய உண்மை விகாரங்களை இன்னமும் புரிந்து கொள்ளாமல், “இலங்கையுடனான உறவு மேம்பட்டு வருகிறது” என்று குடியரசுத் தலைவரின் உரையிலே குறிப்பிட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை என்று கேட்டுள்ளார் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி.

இலங்கை அதிபர் ராஜபக்ஷ அவர்கள் ஈழத் தமிழர்கள்பால் அக்கறை கொண்டவரைப் போல இந்திய அரசிடம் காட்டிக் கொண்டு, இந்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்வதும், அதே நேரத்தில் அந்த உதவிகளை ஈழத் தமிழர்களுக்குப் பயன்படுத்தாமல், சிங்களவர்களுக்கே பயன்படுத்தி வருவதாகவும் கருணாநிதி கூறியுள்ளார்.

கேழ்வரகில் நெய் வடிகிறது

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானமியற்றிய ஜெயலலிதா, தற்போது அவரின் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டதற்காக கண்ணீர் வடிப்பதாக கூறுவது கேழ்வரகில் நெய் வடிகிறது என்று கூறத்தானே தோன்றும் என்றும் கருணாநிதி கேட்டுள்ளார்.

இலங்கையில் இறுதி கட்டப் போர் நடந்த போது முதல்வராக இருந்த கருணாநிதி, மத்திய கூட்டணியில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தும் மக்களைப் பாதுகாக்க ஏதும் செய்யவில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பல முறை குற்றம் சாட்டியுள்ளார். அதே போல இலங்கை விடயத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் பூணுவதாக திமுகவும் தொடர்ந்து கூறி வருகிறது.

இதேநேரம் தொலைபேசி நிறுவனங்களுக்கு இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைகளை விற்றதில் பெரும் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளையடுத்து மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிய திமுகவைச் சேர்ந்த ஆ ராசா, அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் குறித்து ஆராயும் நாடாளுமன்ற கூட்டுக் குழு முன் ஆஜராகி தன் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க விரும்புவதாக நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.