'காத்தான்குடி பெண்கள் பணிப்பெண்களாக செல்வதை தவிர்க்க நடவடிக்கை'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 பிப்ரவரி, 2013 - 15:28 ஜிஎம்டி

மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தமது பிரதேச பெண்கள் அரபு நாடுகளுக்கு பணிப் பெண்களாக செல்வதை தவிர்ப்பது தொடர்பாக கவனம் செலுத்தி வருவதாக கூறகின்றது.

இதற்கான காரணங்களை அறிந்து ''கூட்டு ஸக்காத் நிதி'' மூலம் அவர்களுக்கு உதவுதல் குறித்து கவனம் செலுத்தப்பட்டுவருவதாக சம்மேளனத்தின் செயலாளர் அப்துல் கபூர் கூறுகின்றார்.

சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக் என்ற பணிப் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலையே, இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டி தம்மை தூண்டியதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது தமது பிரதேசத்திலிருந்து பணிப்பெண்கள் செல்வது தற்போது குறைந்திருந்தாலும் முதற்கட்டமாக அரபு நாடுகளில் தற்போதுள்ள பணிப் பெண்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

குறிப்பாக தங்களுக்கென உள்ளுரில் சொந்த நிலம் வாங்குதல் மற்றும் வீடு கட்டுதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தான் பணிப் பெண் வேலைக்கு பலர் செல்கிறார்கள் என தெரிவித்துள்ள அவர், ஏற்கனவே ''ஸக்காத் நிதி'' மூலம் தமது பிரதேசத்தில் பல குடும்பங்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கின்றார்.

தமது குடும்ப பொருளாதார நிலைமை காரணமாகவே பெண்கள் பணிப் பெண்களாக செல்வதாக பலரும் கூறுகின்றார்கள். பள்ளி வாயல்கள் சம்மேளனம் அவர்களது தேவை அறிந்து உதவ முன் வருவது வரவேற்கத்தககது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

12 வருடங்கள் அரபு நாடுகளில் பணிபுரிந்து விட்டு தற்போது உள்ளுரில் சுய தொழில் புரியும் பெண்ணொருவர் தனது கணவன் தன்னை விட்டுப் பிரிந்ததன் காரணமாக வாழ்வதாரம் இல்லாத நிலையிலே தான் பணிப் பெண்ணாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக கவலையுடன் கூறினார்.

அதேவேளை, குடியிருக்க சொந்தமான நிலமோ வீடோ இல்லாத நிலைமையாலும் தனது மறுவாழ்வில் சீதனம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதற்காகவும் தற்போது தனது தாய் தன்னை அடுத்து அரபு நாடொன்றுக்குச் சென்று தொழில் புரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், ''தமது பிரதேசத்தில் தற்போது சீதனப் பிரச்சினை என்பது இல்லை. பிரச்சாரங்களினால் மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளார்கள்'' என்று சம்மேளனத்தின் ஸகாத் மற்றும் சூறா சபை செயலாளர் ஏ.எம். சாதீக்கீன் தெரிவிக்கின்றார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.