"இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் மீது பாலியல் வன்முறை"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 பிப்ரவரி, 2013 - 10:50 ஜிஎம்டி

"தடுத்துவைக்கப்பட்டவர்கள் மீது பாலியல் வன்முறை"--- ஹுயுமன் ரைட்ஸ் வாட்ச் குற்றச்சாட்டு

இலங்கைப் பாதுகாப்புப் படையினர் , விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டவர்களாக சந்தேகிக்கப்பட்டு , போர்க்காலத்தில் கைது செய்யப்பட்ட பலரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக, சர்வதேச மனித உரிமைக் குழுவான, ஹ்யுமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியிருக்கிறது.

இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்து அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை ஒன்றில், 2006லிருந்து 2012ம் ஆண்டு வரை, இலங்கை அரசின் சிறைகளில் வைக்கப்பட்டிருந்த தமிழ் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை கிரிமினல் விசாரணைகளை நட்த்தவேண்டும் என்றும் அது கூறுகிறது.

இலங்கை படையினரால் நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகள் 2006க்கு பின்னரான கால கட்டத்தில் மிகவும் அதிகரித்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.

இதில் பெரும்பான்மையான வன்முறைகள் அரசியல் ரீதியான நோக்கங்கள் கொண்டவை என்றும் அது கூறுகிறது.

இது குறித்து 75 சம்பவங்களை , ஹுயுமன் ரைட்ஸ் வாட்ச் , ஆராய்ந்திருப்பதாகக் கூறுகிறது. இதில் பாதிக்கப்பட்ட 31 ஆண்கள், 41 பெ\ண்கள் மற்றும் மூன்று சிறார்களிடம் அது ரகசியமாக விசாரணைகளை நடத்தியிருப்பதாகவும் கூறுகிறது.

இந்த விசாரணைகள் ஒரு வருட காலகட்டத்தில், ஆஸ்திரேலியா, ஐக்கிய ராச்சியம், இந்தியா, ஜெர்மனி, மலேசியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட இந்த நபர்களிடையே நடத்தப்பட்டதாக அது கூறுகிறது.

பாலியல் வல்லுறவு--ஒரு சட்டவிரோத ஆயுதம்

பாலியல் வல்லுறவை, இலங்கைப் படையினரும் போலிசாரும், போரின் போதும் போருக்குப் பின்னரும், விடுதலைப்புலிகள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கு ஒரு சட்டவிரோதமான ஆயுதமாகவே பயன்படுத்தினர் என்று அது கூறுகிறது.

இந்த ஆய்வு, அரசாங்க கட்டுப்பாடுகள் காரணமாக, முன்னர் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலையான நபர்களிடையே மட்டுமே நடத்தப்பட்டதாகவும், தற்போதும் அரசின் சிறைகளில் இருப்பவர்களின் நிலை மிகவும் கவலை அளிப்பதாகவே இருப்பதாகவும் அது கூறுகிறது.

இந்தக் குற்றச்செயல்களில் அரச படையினர் மற்றும் போலிசார் தவிர, அரசுக்கு ஆதரவான இணை ராணுவக்குழுக்களும் ( ஆயுதக்குழுக்கள்) ஈடுபட்டனர் என்று நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள் அடிப்படையில் தெரியவருவதாக அது கூறுகிறது.

இந்த எல்லா சம்பவங்களிலும் , பாலியல் வன்முறை தவிர, இவர்கள் மற்ற வகை சித்ரவதைகள், மனித கண்ணியத்துக்கு கீழான வகையில் நட்த்தப்படுதல் போன்றவற்றுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அது கூறியது.

விசாரணை தேவை

இலங்கை அரசு இந்த சம்பவங்கள் குறித்து சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படகூடிய நியாயமான முறையில் விசாரணைகளை நடத்தி, சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களை தண்டிக்கவேண்டும் என்று அது கூறுகிறது.

மேலும், குற்றச்சாட்டுக்கள் பதியப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் மற்றும் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்ப்வர்களை அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் , மனித உரிமைக்குழுக்களுக்கு நாட்டின் வட பகுதிக்கு செல்ல அனுமதி தரவேண்டும், அவசரகால மற்றும் பயங்கரவாத சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யவேண்டும் போன்ற கோரிக்கைகளையும் அது முன்வைத்திருக்கிறது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.