'சர்வதேசம் புதிய பிரிவினை உத்தியை பரீட்சித்துப் பார்க்கிறது'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 மார்ச், 2013 - 18:17 ஜிஎம்டி
25 நாடுகளின் ஒத்துழைப்போடு இலங்கை தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் நிறைவேறியது

25 நாடுகளின் ஒத்துழைப்போடு இலங்கை தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் நிறைவேறியது

பிரிவினையை உருவாக்குவதற்கான புதிய உத்தியை சர்வதேச சமூகம் இலங்கையில் பரீட்சித்துப் பார்க்க முயற்சிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்கொலைக் குண்டுதாரிகள் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை முறியடித்த இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கையை ருவான்டாவில் நடந்த மக்கள் படுகொலைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவது நியாயமற்றது என்று இலங்கை அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் டலஸ் அலகப்பெரும ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

முப்பது ஆண்டுகால யுத்தத்திலிருந்து மீண்டு இருக்கின்ற இலங்கையின் மீது ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சில் தேவையற்ற அழுத்தங்களைக் கொடுப்பதாகவும் இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது.

'பழைய வாக்குறுதிகள்': ஐதேக

பான்கி மூன் போர் முடிவில் இலங்கை சென்றபோது

பான்கி மூன் போர் முடிவில் இலங்கை சென்றபோது (2009-இல்)

ஆனால் இலங்கை அரசாங்கம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேசத்துக்கு கொடுத்த வாக்குறுதிகளையே சர்வதேச சமூகம் நிறைவேற்றக்கேட்கிறது என்று நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

போர் முடிந்து ஒரு மாதகாலத்தில் ஐநா தலைமைச் செயலர் பான்கி மூன் இலங்கை வந்தபோது, பல வாக்குறுதிகளை அளிக்கும் கூட்டறிக்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் ஐநா தலைமைச் செயலரும் கைச்சாத்திட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

அரசியலமைப்பின் 13-ம் திருத்தததை அடிப்படையாகக்கொண்டு அரசியல் தீர்வுத்திட்டத்தை வழங்குவதற்கும் நாட்டில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டிருந்தால் அவை குறித்து விசாரிப்பதற்கு பொறிமுறை ஒன்றை அமைப்பதாகவும் எமது மகிந்த ராஜபக்ஷ அப்போது வாக்குறுதி அளித்திருந்ததாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இந்தியாவுடனான உறவு?

இதேவேளை, ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த இந்தியாவுக்கு எதிராக நாட்டில் கருத்துக்களை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் அசெளகரியங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டுமென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியதாகவும் அமைச்சர் டலஸ் அலகப்பெரும ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் வரலாற்று ரீதியான உறவுகளில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் இலங்கை அரசாங்கம் கூறுகிறது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.