'டியர் சிரியா': உலக அமைதியை வேண்டும் பாப்பரசரின் ஈஸ்டர் செய்தி

  • 31 மார்ச் 2013
ஈஸ்டர் கொண்டாட்டத்தின்போது பாப்பரசர்
Image caption ஈஸ்டர் கொண்டாட்டத்தின்போது பாப்பரசர்

உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பண்டிகையை முன்னிட்டு சென் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பாப்பரசர் பிரான்சிஸ் நடத்திய சிறப்பு வழிபாட்டில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதிய பாப்பரசராக பொறுப்பேற்ற கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ், உர்பி எட் ஒர்பி என்ற தனது முதலாவது பாரம்பரிய ஈஸ்டர் பண்டிகை செய்தியை வழங்கினார்.

மத்திய கிழக்கில் அமைதி வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல், இராக் மற்றும் சிரியா விவகாரங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

மாலியிலும் நைஜீரியாவிலும் காங்கோ குடியரசிலும் மத்திய ஆப்ரிக்க குடியரசிலும் அமைதி திரும்ப வேண்டும் என்றும் பாப்பரசர் தனது ஈஸ்டர் செய்தியில் கேட்டுக்கொண்டார்.

வடகொரியா- தென்கொரியா இடையே நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என்றும் பாப்பரசர் வலியுறுத்தினார்.

21-ம் நூற்றாண்டில் மிகமோசமான அடிமை முறையாக விளங்கும் ஆட்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் நடவடிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய பாப்பரசர் முன்னெப்போதும் இல்லாதவகையில் புதிய முறையிலான வாழ்க்கைமுறையை வெளிப்படுத்துவதாக வத்திக்கானில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.

தனக்குரிய மாளிகைக்குச் சென்று தங்க மறுத்துவரும் பாப்பரசர் பிரான்சிஸ், மற்றப் பாதிரியார்களுடன் பொது உணவறையிலேயே உணவு உண்பதாகவும் கூறப்படுகிறது.