சம்பள ஒப்பந்தம் காலாவதியானது: தொழிலாளர்களை தெளிவுபடுத்த நடவடிக்கை

  • 31 மார்ச் 2013
ஒவ்வொரு முறையும் சம்பளத்தை உயர்த்துவதற்காக தொழிலாளர்கள் வருமானத்தை இழந்து போராட வேண்டியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Image caption ஒவ்வொரு முறையும் சம்பளத்தை உயர்த்துவதற்காக தொழிலாளர்கள் வருமானத்தை இழந்து போராட வேண்டியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் ஒப்பந்தம் இன்று மார்ச் 31-ம் திகதியுடன் காலாவதியாகிவிட்டது.

தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையே நடக்கின்ற பேச்சுவார்த்தைகளின் மூலம் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது.

ஆனால், இரண்டாண்டுகள் முடிந்துவிட்ட நிலையிலும் இந்த சம்பளப் பேச்சுவார்த்தைகள் இன்னும் ஆக்கபூர்வமான முறையில் முன்னெடுக்கப்பட வில்லை என்று மலையக சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அடிப்படை சம்பளத்தை உயர்த்தக் கோரிக்கை

ஏற்கனவே நடைமுறையில் இருந்த சம்பள ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவற்றைப் போக்க புதிய பேச்சுவார்த்தைகளின்போது கவனம் செலுத்த வேண்டுமென்றும் தொழிலாளர்களின் நலன்கள் பற்றி ஆராய்ந்துவரும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Image caption 'தொழிலாளர்களின் நிலைமை ஆங்கிலேயர் காலத்திலிருந்து இன்னும் முன்னேறவில்லை': அருட்தந்தை எஸ்.கீதபொன்கலன்

தொழிலாளர்களுக்கு போதுமான விளக்கங்கள் கொடுக்கப்படாமலேயே சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தைகளும் சம்பள நடைமுறைகளும் காலங்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சம்பளப் பிரச்சனை தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு பணிகளை முன்னெடுத்துவருவோரில் ஒருவரான அருட்தந்தை எஸ். கீதபொன்கலன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

புதிய சம்பள பேச்சுவார்த்தைகளின்போது, தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத் தொகையை உயர்த்துவதற்கும் பழைய முறையில் உள்ள குறைபாடுகளை திருத்துவதற்கும் தொழிற்சங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டிய தேவை இருப்பதாக அவர் கூறினார்.

ஒவ்வொரு தடவையும் காலங்கடந்து சம்பள பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படுவதால் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றமை குறித்து தொழிற்சங்க மற்றும் அரசியல் தலைவர்கள் அக்கறை செலுத்தாமல் இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மலையகத்தில் பல மாவட்டங்களிலும் தொழிலாளர்களை தெளிவுபடுத்தும் பணிகளிலும் தமது நிலைமைகளை வெளிப்படுத்தி கையொப்பங்களை திரட்டி சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்துக்கு (ஐஎல்ஓ) அனுப்பும் பணிகளிலும் அப்பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் ஈடுபட்டுவருவதாக அருட்தந்தை கீதபொன்கலன் கூறினார்.