கைது செய்யப்பட்ட பிக்குமார் விடுதலை

தாக்குதலுக்கு உள்ளான கடை
Image caption தாக்குதலுக்கு உள்ளான கடை

இலங்கையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒரு ஆடைக் கடையை தாக்கிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று பௌத்த பிக்குமாரை இலங்கை நீதிமன்றம் ஒன்று விடுதலை செய்துள்ளது.

சிங்கள பெரும்பான்மை சமூகத்தின் சில கடும்போக்கு பௌத்த அமைப்புக்களால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த வியாழக்கிழமை அந்த முஸ்லிம்களின் கடைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பார்க்கப்படுகின்றது.

அந்தக் கடையை தாக்குகின்ற 100 க்கணக்கானவர்களைக் கொண்ட கும்பலுக்கு பௌத்த பிக்குமார் தலைமை தாங்குவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

அந்த தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.

பிக்குமார் விடுதலை

Image caption பொதுபல சேனாவில் கூட்டம் ஒன்று

ஆனால், திங்களன்று பிற்பகலில்தான் இந்த மூன்று பிக்குமாரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் பின்னர் விரைவாக அவர்களும், ஏனைய 14 பேரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.

பொலிஸாரும், பாதிக்கப்பட்ட ஃபசன் பக் நிறுவனமும் வழக்கை தொடர விரும்பவில்லை என்று கூறியதால் வழக்கு கைவிடப்பட்டதாக நீதிமன்ற அலுவலகர் ஒருவர் கூறியதாக ஏஎஃபி நிறுவனம் தெரிவித்திருந்தது.

அந்த அதிகாரி தனது பெயரைக் கூற மறுத்துவிட்டார். இது குறித்து கருத்துக் கூற ஃபசன் பக் நிறுவனமும் மறுத்துவிட்டது.

ஏதாவது பேசினால் தமக்கு பாதக விளைவுகள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் இருப்பதை இது காண்பிக்கிறது.

சனிக்கிழமையன்று இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அதிர்ச்சி வெளியிட்ட அந்த துணி நிறுவனம், தனது ஊழியர்கள் அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

அருகில் இருக்கும் ஒரு பௌத்த ஆலயத்தில் இருந்துதான் தாக்குதலாளிகள் கிளம்பி வந்ததாக சில உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

கடும்போக்கு பௌத்த குழுக்கள் அண்மைக்காலமாக முஸ்லிம்களை கேலி, கிண்டல் செய்யும் வகையில் பொதுக் கூட்டங்களை நடத்திவருகின்றன.

இலங்கையின் சனத்தொகையில் முஸ்லிம்கள் 9 வீதமாகும்.

கடும்போக்கு இஸ்லாமிய வாதம் வளருவதாக கடும்போக்குடைய பிக்குமார் கூறுகிறார்கள்.

ஆனால், சிறுபான்மை சமூகம் அதனை மறுக்கிறது.

சனிக்கிழமை நடந்த கூட்டமொன்றில் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ஏனையவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலர், குறைந்தபட்சம் ஒரு கடும்போக்கு குழுவுக்காவது வெளிப்படையாகவே ஆதரவாக இருக்கிறார்.