அநுராதபுரம் சிறையில் இந்திய மீனவர்களை சந்தித்தார் தொண்டமான்

  • 3 ஏப்ரல் 2013
Image caption இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்

இலங்கையின் அநுராதபுரம் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 19 இந்திய மீனவர்களை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சென்று சந்தித்துள்ளார்.

அவருடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் சென்றுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்னர் தமிழகத்தின் கடலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே எஸ் அழகிரி, அந்த மீனவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தம்மிடம் கோரியதாகவும் அதையடுத்து செவ்வாய்கிழமை ஜனாதிபதியுடன் ஒரு சந்திப்பை நடத்திவிட்டு, புதன்கிழமை அவர்களை சிறையில் சென்று சந்தித்ததாகவும் ஆறுமுகன் தொண்டமான் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அவர்கள் மீதான வழக்கு விசாரணை இம்மாதம் 11 ஆம் தேதி வரும் போது, இ தொ கா வின் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான் பி.ராஜதுரை தலைமையிலான ஒரு குழுவினர் தமிழக மீனவர்களை பிணையில் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை அரச தரப்பினர் அந்த மீனவர்களை நல்ல முறையில் நடத்தியதாக அவர்கள் தம்மிடம் தெரிவித்தனர் என தொண்டமான் தமிழோசையிடம் கூறினார்.

இருநாட்டு மீனவர்களும் மற்ற நாட்டின் கடற்பரப்பை தாண்டுவதும், அதன் மூலம் பிடிபட்டு சிறைகளில் அடைக்கப்படுவதையும் தடுக்க இந்திய இலங்கை அரசுகள் பேசி வருவதாகம், அதன் மூலமே இதற்கு ஒரு தீர்வு ஏற்பட முடியும் என்றும் ஆறுமுகன் தொண்டமான் கூறுகிறார்.

அண்மைக் காலமகாம தமிழகத்தில் எழுந்துள்ள இலங்கைக்கு எதிரான உணர்வுகள் குறித்து அனைவரும் கவலையடைந்துள்ளனர் என்றும், இந்திய இலங்கை உறவுகள் சுமுகமாக இருக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி உட்பட அனைவரும் அக்கறையுடன் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

ஆனால் தமிழகத்தில் நடக்கக் கூடாத விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பது தமக்கு வருத்தமாக உள்ளது என்றும் இலங்கை அமைச்சரும், இ தொ க வின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.