உதயன் பத்திரிகை மீது மீண்டும் தாக்குதல்

  • 3 ஏப்ரல் 2013
தாக்குதல் நடைபெற்ற உதயனின் கிளிநொச்சி அலுவலகம்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகத்தின் மீது புதன்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாதவர்கள் நடத்திய தாக்குதல் ஒன்றில் அலுவலக முகாமையாளர் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

அதிகாலை நான்கு மணியளவில் அலுவலகத்திற்கு வாகனம் ஒன்றில் கொண்டுவரப்பட்ட பத்திரிகைக் கட்டுக்களை விநியோகத்திற்காகத் தயார் செய்து கொண்டிருந்த வேளை, திடீரென அலுவலகத்தில் புகுந்த ஆறு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஒன்றே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ரத்தக் கறை

இந்தத் தாக்குதலின்போது அலுவலக ஜன்னல் கண்ணாடிகள், போட்டோ பிரதி செய்யும் இயந்திரம், கணிணி என்பன அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், பத்தரிகைகளை ஏற்றி வந்த வாகனம், மோட்டார் சைக்கிள்கள் என்பனவும் சேதமாக்கப்பட்டிருப்பதாக உதயன் பத்திரிகை நிறுவன பணிப்பாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சரவணபவன் தெரிவித்தார்.

படுகாயமடைந்த அலுவலக முகாமையாளரான 66 வயதுடைய ஆறுமுகம் பொன்ராஜ் கிளிநொச்சி வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனைய காயமடைந்த இரண்டு பணியாளர்களும் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிசாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன், காயமடைந்தவர்களின் வாக்குமூலங்களையும் பதிவு செய்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அலுவலகத்தின் மீது ஊர்வலமாக வந்த வன்முறைக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி சேதங்களை ஏற்படுத்திய சம்பவம் இடம்பெற்ற சில தினங்களில் கிளிநொச்சி பத்திரிகை அலுவலகத்தின் மீதான இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.