தோட்டத் தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் நிறைவேறியது

  • 5 ஏப்ரல் 2013
சம்பள ஒப்பந்தம் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவை ஈடு செய்யாது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Image caption சம்பள ஒப்பந்தம் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவை ஈடு செய்யாது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டொப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நடைமுறையாகும் விதத்தில் எட்டப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்களின் நாட்சம்பளம் 515 ரூபாயிலிருந்து 620 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.

தொழிலாளர்கள் உற்பத்தித்திறனையும் தொழிற்திறனையும் அதிகரிப்பதில் ஒத்துழைப்புடன் நடந்துகொள்வார்கள் என்ற புரிந்துணர்வின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் கூறியுள்ளது.

அதன்படி, 25 வேலைநாட்கள் கொண்ட ஒரு மாதத்தில் தொழிலாளி ஒருவரின் வருகை 75 வீதத்தை தாண்டினால் அவருக்கு 15,500 ரூபாய் சம்பளமாகக் கிடைக்கும் என்று இருதரப்பும் இணங்கியுள்ளது.

நாளொன்றுக்கு தேவையான தேயிலை நிறையை விட மேலதிகமாக பறிக்கப்படும் தேயிலைக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 3 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த கூட்டொப்பந்தம் ரகசியமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கணக்கில் எடுக்கவில்லை என்றும் பேச்சுவார்த்தையில் பங்கெடுக்காத தொழிற்சங்கங்கள் விமர்சித்துள்ளன.

தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு இடமளிக்கக்கூடாது என்ற திட்டத்திலேயே பேச்சுவார்த்தையில் பங்கெடுக்கும் மூன்று தொழிற்சங்கங்களும் செயற்பட்டுள்ளதாக எதிர்ப்பு-தொழிற்சங்கங்கள் விமர்சிக்கின்றன.

ஆனால் அந்தக் குற்றச்சாட்டுக்களை இதொகா உள்ளிட்ட மூன்று தொழிற்சங்கங்களும் மறுக்கின்றன.