'முல்லைத்தீவில் திட்டமிட்ட வெளியாரின் குடியேற்றம்': தமிழ்க் கூட்டமைப்பு

  • 6 ஏப்ரல் 2013
முல்லைத்தீவு மாவட்டம் இறுதிக்கட்ட யுத்தத்தில் பெரும் அழிவுகளை சந்தித்தது
Image caption முல்லைத்தீவு மாவட்டம் இறுதிக்கட்ட யுத்தத்தில் பெரும் அழிவுகளை சந்தித்தது

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு மீளக்குடியேற்றப்பட்ட பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் குடியிருக்க காணிகள் இல்லாதிருக்கின்ற நிலையில், அரசாங்கம் வெளிப் பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்களை அப்பகுதிகளில் திட்டமிட்டு குடியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் குடியிருக்க காணிகள் இன்றி சிரமப்படுவதாகவும் ஆனால், அப்பகுதிகளில் வெளிப் பிரதேச மக்களைக் குடியேற்றுவதற்காக அமைச்சர் ரிசாத் பதியுதீனின் முன்னெடுப்பில் வன இலாகாவுக்குச் சொந்தமான காணிகள் துப்பரவு செய்யப்படுவதற்கான வேலைகள் நடந்துவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் அரசாங்க அதிகாரிகளும் அமைச்சர்களும் செயற்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

இன்று சனிக்கிழமை குறித்த பிரதேசத்தில் காணிகளை துப்புரவு செய்வதற்காக கனரக வாகனங்களுடன் வந்த அதிகாரிகளும் பணியாளர்களும் மக்களின் எதிர்ப்பு காரணமாக திரும்பிச் சென்றுவிட்டதாகவும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மாவட்டம் முழுமைக்குமான மக்களுக்காக பணியாற்ற வேண்டிய அமைச்சர் ரிசாத் பதியுதீன், இன-மத பாகுபாடு அடிப்படையில் முடிவுகளை எடுப்பதற்காக அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் கூறினார்.

மறுக்கிறார் அமைச்சர் ரிசாத்

Image caption முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்கள் சொந்த இடத்தில் குடியேற்றப்படாமல் சீனியாமோட்டைக் காட்டுப்பகுதியில் குடியேற்றப்பட்டமைக்கு கடந்த ஆண்டில் எதிர்ப்புகள் கிளம்பின ( கோப்பு படம்)

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை அமைச்சர் ரிசாத் பதியுதீன் பிபிசி தமிழோசையிடம் மறுத்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் யாருக்கும் அங்கு காணிகள் கொடுக்கப்படமாட்டாது என்றும், 22 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்குப் பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்களும் அவர்களின் உறவினர்களுமே அங்கு குடியேற்றப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த மூன்றாண்டுகளாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட நிலையிலும் இன்னும் காணிகள் கிடைக்காதுள்ள மக்களுக்கே இந்தக் காணிகள் என்றும் குறித்தப் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கும் அப்பகுதியிலேயே காணிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் ரிசாத் கூறினார்.

தான் இன-மத பாகுபாட்டுடன் செயற்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார்.

இதேவேளை, குறிப்பிட்ட பிரதேசத்தைச் சேராத வெளியாரே முள்ளியவளை பகுதியில் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளராகவும் உள்ள எஸ். கனகரட்னம் கூறுகிறார்.

குறித்தப் பிரதேசத்தில் தமிழ் மக்களுக்கும் காணிகளை வழங்க ஏற்கனவே இணக்கம் காணப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.