வடமாகாண காணி சுவீகரிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

  • 24 ஏப்ரல் 2013

வலிகாமம் வடக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான 6400 ஏக்கர் காணிகள் உட்பட வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தின் தேவைக்காக சுவீகரிக்கும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்தில் புதனன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணம் அரச செயலகத்திற்கு எதிரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்திருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் கஜேந்திரன், நவசமசமாஜ கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பிரதிநிதிகளும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தினர், வலி வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் ஏ9 வீதியின் இரு பக்கங்களிலும் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டிருந்ததாகவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கு வரமுயன்ற பொதுமக்களை வலிகாமம் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் வசிக்கின்ற அகதிகள் முகாம்கள் மற்றும் இடங்களில் படையினர் தடுத்து நிறுத்தியிருந்ததாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்தார்.

''இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களின் காணிகளை அவர்களிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும். அவற்றில் அவர்களை மீள்குடியமர்த்த வேண்டும். இராணுவம் இந்தக் காணிகளில் இருந்து வெளியேறிச் செல்ல வேண்டும். இத்தகைய காணி அபகரிப்பு உட்பட பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வரையில் வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கென நிலைமாற்று நிர்வாகம் ஒன்று சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் தற்போதைய இலங்கை அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட வகையில் அமைக்கப்பட வேண்டும்'' என்ற கோரிக்கைகளையும் தாங்கள் முன்வைத்திருப்பதாக கஜேந்திரன் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர், யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும் வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ள பகுதிக்குச் சென்று பார்வையிடுதவற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.