லண்டன் முள்ளிவாய்க்கால் நிகழ்வு : ஆயிரக்கணக்கில் திரண்ட தமிழர்கள்

இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறந்தவர்களின் நினைவாக லண்டனில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

பிரிட்டிஷ் தமிழர் பேரவையினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லண்டனின் மையப்பகுதியில் ''மார்பிள் ஆர்ச்'' பகுதியில் ஆரம்பித்த இந்த ஊர்வலம் ''பிக்காடிலி சர்க்கஸ்'' வரை தொடர்ந்தது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்ற தொனிப்பொருளை மையமாகக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டாலும், இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை, அந்த நாட்டை பிரிட்டன் பகிஸ்கரிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினார்கள்.

இலங்கையில் கொல்லப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்காத நிலையில், அங்கு நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை பிரிட்டிஷ் பிரதமரும், பக்கிங்ஹாம் அரண்மனையும் புறக்கணிக்க வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவையின் ஊடகத் தொடர்பாளரான சாம் கிருஷ்ணா தமிழோசைக்கு தெரிவித்தார்.

'முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள்'

அந்த மாநாட்டில் கலந்துகொள்வது என்று பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகம் ஏற்கனவே அறிவித்திருந்தாலும், அவருக்கு பிரித்தானிய பிரஜைகள் என்ற வகையில் தாம் தொடர்ந்தும் அழுத்தத்தை கொடுப்போம் என்று கூறிய சாம் கிருஷ்ணா, பிரதமரின் அந்த முடிவு சர்ச்சைக்குரிய முடிவு என்று துணைப்பிரதமர் கூறியிருப்பதை வரவேற்றுள்ளார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மனித உரிமைகளை மீறிய இலங்கை அரசாங்க ஆதரவுடனான பேரினவாதச் சக்திகள், தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்படத் தொடங்கியிருப்பதாகவும் கூறிய சாம் கிருஷ்ணா, தாம் அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார்.