தெரிவுக்குழுவில் இடமில்லை : முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தி

  • 22 ஜூன் 2013

இலங்கையில் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை திருத்துவது குறித்து ஆராய இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய சிறுபான்மைக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இடமளிக்கப்படாதது குறித்து அந்தக் கட்சியினர் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.

இது குறித்து கல்முனையில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதேவேளை, முக்கிய சிறுபான்மைக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸை புறக்கணித்து விட்டு இந்த நடைமுறைகளில் முஸ்லிம்களும் உரிய பங்களிப்பை பெற முடியாது என்று தமிழோசையிடம் தெரிவித்த அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான ஹசன் அலி அவர்கள், சில வேளைகளில் அடுத்த கட்டமாக இலங்கை அரசாங்கத்தினால் உறுப்பினர்கள் அறிவிக்கப்படும் போது அதில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடமளிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், 13வது திருத்தச் சட்டத்தை மாற்றுவதற்காக இந்த தெரிவுக்குழு அறிவிக்கப்பட்டதாக ஒரு புறம் கூறப்பட்டாலும், அது இனப்பிரச்சினை தீர்வுக்கானது என்று மறுபுறம் கூறப்படுவதால், அந்த தெரிவுக்குழு அமைக்கப்படுவதற்கான நோக்கம் குறித்து குழப்பம் நிலவுவதாகவும் ஹசன் அலி குறிப்பிட்டார்.

அதேவேளை 13வது திருத்தச்சட்டத்தில் உள்ளவற்றை குறைப்பதற்கான நோக்கில் அந்த தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதனை தமது அமைப்பு கடுமையாக எதிர்க்கும் என்றும் ஹசன் அலி கூறியுள்ளார்.