வடமாகாண சபைக்கான தேர்தல் வேட்பு மனு தாக்கல் காலம் ஆரம்பம்

  • 25 ஜூலை 2013
வேட்பு மனு தாக்கல் செய்த பிக்கு
Image caption வேட்பு மனு தாக்கல் செய்த பிக்கு

இலங்கையின் வடமாகாண சபை உட்பட மூன்று மாகாண சபைகளுக்கான வேட்பு மனுக்கள் ஏற்பதற்கான முதல் நாளாகிய இன்று மன்னார், வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் வடமாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனசெத பெரமுண (மக்கள் நல முன்னணி), சிறிலங்கா தொழிலாளர் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றன.

ஜனசெத பெரமுண கட்சியின் செயலாளராகிய பத்தரமுல்ல சீவரத்தன தேரோ என்ற பௌத்த பிக்கு மன்னார் வவுனியா அரச செயலகங்களி;ல் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றார். தமது கட்சி கிளிநொச்சியிலும் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை சிறிலங்கா தொழிலாளர் கட்சியின் செயலாளர் பி.ஜி.தயானந்த யாழ் அரச செயலகத்தில் தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

வடபகுதியில் தமிழ் மக்கள் மத்தியில் பரிச்சயமில்லாத இந்தக் கட்சிகள், மூன்று மாவட்டங்களில வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உட்பட முக்கிய கட்சிகள் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன. வேட்பாளர்கள் தெரிவு முடிவடைந்ததன் பின்பு அடுத்த வாரமளவிலேயே பிரதான கட்சிகள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளதகாத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

வடமாகாண சபைக்கான தேர்தலில் சுயேச்சையாக சிலர் போட்டியிடுவதற்கும் தயாராகி வருவதாகக் கூறப்படுகின்றது.