பெரிய கப்பல்களுக்கு வசதியாக கொழும்புத் துறைமுகம் அபிவிருத்தி

பெரிய கப்பல்களுக்கு வசதியாக தெற்கு- கொழும்பு முனையம் திறக்கப்பட்டுள்ளது
Image caption பெரிய கப்பல்களுக்கு வசதியாக தெற்கு- கொழும்பு முனையம் திறக்கப்பட்டுள்ளது

இலங்கையில் கொழும்புத் துறைமுகம் பாரிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதான துறைமுகத்துக்குள் பெரிய கப்பல்கள் பிரவேசிப்பதற்கு வசதியாக இந்த விரிவுபடுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்புத் துறைமுக அபிவிருத்தி செயற்திட்டத்தின் முதற்கட்டமான தெற்கு- கொழும்பு முனையத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை காலை திறந்துவைத்தார்.

சுமார் 500 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த செயற்திட்டத்தின் 85 வீத செலவினத்தை சீன அரசு வழங்கியுள்ளது. மிகுதி 15 வீதத்தை இலங்கை அரசு செலவிட்டுள்ளது.

பெரியளவான கொள்கலன்களை ஏற்றிய கப்பல்கள் தரித்துநிற்பதற்கு வசதியாக இந்த தெற்கு துறைமுக முனையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலும் அண்டை நாடுகளிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவருவதாக இந்தியாவுக்கு கவலைகள் உள்ள நிலையில், இலங்கையின் மற்றுமொரு துறைமுக செயற்திட்டம் சீனாவின் உதவியில் நடந்துள்ளது.

ஆனால், இந்தத் துறைமுகத்தை இராணுவத் தேவைகளுக்காக வெளிநாட்டுச் சக்திகள் பயன்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என்று இலங்கை அரசாங்கம் கூறுகின்றது.

கொழும்புத் துறைமுக அபிவிருத்தியின் மூலம் இந்தியத் துணைக் கண்டப் பிராந்தியத்துக்குள் பெருமளவிலான கப்பல் போக்குவரத்துக்களை ஈர்க்க முடியும் என்று இலங்கை அதிகாரிகள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.