வெலிவேரிய சம்பவத்திற்கு வெளிப்படையான விசாரணை கோருகிறது அமெரிக்கா

வெலிவேரிய நகரில் கத்தோலிக்க தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை மன்னிக்க முடியாது என்று அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது
Image caption தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தவர்கள் தாக்கப்பட்டமை கவலை அளிக்கிறது: அமெரிக்கா

இலங்கையின் கம்பஹா மாவட்டம் வெலிவேரிய நகரில் நடந்த வன்முறைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய எல்லா விடயங்கள் குறித்தும் நம்பகமான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

வெலிவேரிய வன்முறைகள் குறித்து முழுமையான, வெளிப்படையான விசாரணைகளை நடத்தி விசாரணை முடிவுகள் மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர்வதற்கான நம்பகமான பொறிமுறையொன்று இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

நிராயுதபாணிகளான போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமை உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களால் கவலையடைந்துள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

தாக்குதல்களில் கொல்லப்பட்ட மற்றும் காயப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை வெளியிட்டுள்ள அமெரிக்கா அரசு, அமைதியாக போராட்டம் நடத்துவதற்குள்ள உரிமைக்கு மதிப்பளிக்குமாறும் இலங்கை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக, கத்தோலிக்க தேவாலயம் ஒன்றுக்குள் பாதுகாப்புத் தேடி தஞ்சம் புகுந்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்கா, மத வழிபாட்டுத் தலமொன்றுக்குள் வன்முறைகள் நடப்பதை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.