வன்னியில் மூன்று பிள்ளைகளின் தாய் மீது பாலியல் வல்லுறவு

  • 16 ஆகஸ்ட் 2013
Image caption வன்னிப் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சிறிதரன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்

இலங்கையின் கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான 38 வயதுப் பெண் ஒருவர் பச்சை உடை தரித்த இனந்தெரியாத நபர்களினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தப் பெண் தற்போது கிளிநொச்சி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

'கடந்த செவ்வாயன்று, வீட்டுத் திட்டம் தொடர்பான கூட்டமொன்றில் கலந்து கொண்டுவிட்டு வீட்டிற்குத் திரும்பிய பின்னர், வீட்டின் பின்புறமாக உள்ள பனை மரக் காட்டுக்குள் தொழில் நிமித்தம் குருத்துக்கள் வெட்டிக் கொண்டிருந்த போதே, அவருக்குத் தெரியாமல் பின்பக்கமாக வந்த இருவர் அவருடைய வாயைத் துணியொன்றினால் கட்டி, பலவந்தமாகக் காட்டுக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்' என்றார் சிறிதரன்.

இதுபற்றி ஊர்வாசிகளிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

பலாத்காரத்திற்கு உள்ளான இந்தப் பெண் இரண்டு மணிநேரத்துக்குப் பின்னர், மயக்கம் தெளிந்து மோசமான இரத்தப் பெருக்குடன் நடக்க முடியாத நிலையில் தனது மகளின் வீட்டிற்குச் சென்று தனக்கு நேர்ந்தது பற்றி தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், அவர் பூநகரி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிறிதரன் கூறினார்.

Image caption வவுனியா நெடுங்கேணி சேனைப்பிலவு பகுதியில் பள்ளிச் சிறுமி ஒருவர் இராணுவ சிப்பாயால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் சில மாதங்களுக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்

ஒருநாள் முழுவதும் கிளிநொச்சி வைத்தியசாலையில் மயக்கமடைந்திருந்த நிலையில் இருந்த அவர், தொடர்ந்தும் அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறிதரன் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் அந்தப் பெண்ணைப் பார்வையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு அங்கு கடமையில் இருந்த அதிகாரிகளினாலும் வைத்திய பணிப்பாளரினாலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிசார் சரியான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்றும் சம்பவத்தில் தொடர்புடைய எவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவுமில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறினார்.

வன்னிப் பகுதியின் பல இடங்களிலும் அண்மைக்காலமாக பச்சை உடை அணிந்தவர்களால் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய சிறிதரன், வன்னியில் பெண்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருப்பதாகவும் ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.