வடக்கில் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்: கபே அமைப்பு

  • 17 ஆகஸ்ட் 2013
வடக்கு இலங்கை தேர்தல் களம் சூடுபிடிக்கிறது
Image caption வடக்கு இலங்கை தேர்தல் களம் சூடுபிடிக்கிறது

இலங்கையின் வடக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி உள்ளிட்ட மூன்று அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அச்சுறுத்தப்பட்டிருப்பதாக முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகத் கபே என்ற சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் வேட்பாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசிய கபே இயக்குநர் கீர்த்தி தென்னக்கோன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், புத்தளம், அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடம்பெயர்ந்த நிலையில், சொந்த இடங்களில் இருந்து தொலைவில் இருக்கின்ற 14 ஆயிரம் பேர் தாங்கள் இலகுவாக வாக்களிப்பதற்கான வசதிகளைச் செய்து தருமாறு தேர்தல் திணைக்களத்திடம் கோரியிருப்பதாகவும் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இவர்கள் தமக்குரிய வாக்குச் சாவடிகளில் இருந்து அதிக தூரத்தில் போக்குவரத்து வசதிகளின்றி இருப்பதனால், அந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது தேர்தல் திணைக்களத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார்.

வடக்கில் பல இடங்களில் வேட்பாளர்கள் சுதந்திரமாகச் சென்று தமது பிரசார நடவடிக்கைகளிலும், அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாத நிலைமை நிலவுகின்றது.

வாக்களிப்பு நடைபெறுவதற்கு முன்னர் கடைசி நான்கு வார காலத்திற்குள்ளாவது இத்தகைய நிலைமைகளைப் போக்கி, வேட்பாளர்கள் வாக்காளர்களை சுதந்திரமாகச் சந்தித்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கபே பணிப்பாளர் கோரியுள்ளார்.

இதற்கிடையே, மத்திய மாகாணத்தில் கொத்மலை பகுதியில் இராணுவத்தினர் அரசாங்கம் சார்ந்த வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடுவதாக கபே அமைப்புக்கு முறைப்பாடுகள் வந்துள்ளன.