ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அதிகாரமில்லாத மாகாண சபையும் ஆர்வமாக உள்ள மக்களும்

Image caption தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு கூட்டம்

இலங்கையில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்னும் சரியாக ஒரு மாதத்தில், வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

எனினும், வடமாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகள் இன்னும் வேகம் பெறாத நிலைமையே பொதுவாகக் காணப்படுகின்றது.

இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்ற முக்கிய கட்சியாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உட்பட எந்தக் கட்சியும் இன்னும் தமது கொள்கைகளை வெளிப்படுத்துகின்ற தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை.

ஆயினும் வேட்பாளர்களும், கட்சி முக்கியஸ்தர்களும் கிராமங்களில் சிறிய அளவில் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் இந்தத் தேர்தல் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்களையும், உணர்வுகளையும் கொண்டிருக்கின்றார்கள்.

நம்பிக்கையின்மை

Image caption ஆளும் கூட்டணியும் பிரச்சார நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது.

வடக்கிற்கான மாகாண சபையானது, அதிகாரமற்றதாக இருக்கின்றபோதிலும், அதில் பங்கு பற்ற வேண்டும், வாக்களிக்க வேண்டும், அதன் மூலம் அதனைப் பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தைப் பலரும் பிரதிபலித்திருக்கின்றார்கள்.

வடக்கிற்கென கிடைக்கின்ற முதலாவது பிராந்திய ரீதியிலான இந்த ஆட்சி முறையின் கீழ் போருக்குப் பிந்திய நிiலையில் மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையையும் மக்கள் கொண்டிருக்கின்றார்கள்.

தேர்தல் காலத்தில் மாத்திரமே அரசியல்வாதிகளைச் சந்திக்கக் கூடியதாகவும், அவர்களினால் பெரிய அளவில் பலன்கள் கிடைக்காத போதிலும், இந்தத் தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற முனைப்பு பொதுவாக வடபகுதி மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

அரசாங்கத் தரப்பினரைக் கண்டிக்கின்ற அதேநேரம், எதிர்த்தரப்பாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரையும் கண்டித்து மக்கள் கருத்து தெரிவிக்கத் தவறவில்லை.