சவுதியில் உயிரிழந்த இலங்கைப் பணிப்பெண்: மரணத்தில் சந்தேகம்

  • 2 செப்டம்பர் 2013
சாந்தியின் சவப் பெட்டி
Image caption சாந்தியின் சவப் பெட்டி

சவுதி அரேபியாவில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணின் மரணத்தில் சந்தேகம் வெளியிட்டுள்ள உறவினர்கள் தமது பகுதி காவல் துறையிலும் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்திலுள்ள ஒமடியாமடுவை சேர்ந்த 24 வயதான என்ற குறித்த பணிப் பெண் 2009 ம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் சவுதி அரேபியா ஜித்தா நகரிலுள்ள வீடொன்றில் பணிப் பெண்ணாக தொழில் புரிந்து வந்துள்ளார்.

ஜூலை மாதம் 26ம் திகதி இவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டு ஐந்து வாரங்களின் பின்னர் சடலம் விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு உறவினர்களினால் பொறுப்பேற்கப்பட்டது.

சவுதி அரேபியாவில் தொழில் வாய்ப்பு பெற்றிருந்த நான்கு வருட காலத்தில் தனது மகள் ஒரு தடவை மட்டுமே தங்களுடன் தொடர்பு கொண்டதாக அவரது தந்தையான சீனித்தம்பி யோகேஸ்வரன் கூறுகின்றார்.

தமது குடும்ப வறுமை காரணமாகவே அவர் அந்நாட்டிற்கு பணிப் பெண்ணாக சென்றிருந்த போதிலும் சம்பளப் பணம் கூட தங்களுக்கு அனுப்ப முடியாத நிலையில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

காயங்கள்

தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ள மகளின் பிரேதத்தை பொறுப்பேற்று சொந்த கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டு பிரேத பெட்டி யை திறந்து பார்த்த போது மார்பு , கழுத்து , முழங்கால் , உட்பட அவரது உடம்பில் சித்திரவதைக்குள்ளான தடயங்கள பல இடங்களில் காணப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கும் அவர், தனது மகளின் மரணம் தற்கொலை அல்ல. கொலையாக இருக்கலாம் என சந்தேகமும் வெளியிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண் வேலைகளுக்கு செல்லும் பெண்கள் குடும்பங்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பது சித்திரவதைகளுக்குள்ளாகுதல் மற்றும் சில சந்தர்ப்பங்களில் சடலமாக அனுப்பி வைத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.

விமான நிலையத்தில் சடலத்தை பொறுப்பேற்க வருகை தரும் உறவினர்கள் படிவத்தில் மரணத்தில் சந்தேகம் என தெரிவித்தால் சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை நடத்தப்படும்.

அதற்காக நேரடியாக நீர்கொழும்பு அரசாங்க மருத்துவமனைக்கு சடலம் அனுப்பி வைக்கப்படும். ஆனால் குறித்த பெண்ணின் சடலத்தை பொறுப்பேற்றவர்களினால் சந்தேகங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாரியம் கூறுகின்றது.