இலங்கை தேர்தல்: கண்காணிப்பாளராக செல்கிறார் கோபாலஸ்வாமி

  • 8 செப்டம்பர் 2013
இலங்கை தேர்தல் (ஆவணப்படம்)
இலங்கை தேர்தல் (ஆவணப்படம்)

இலங்கையின் மூன்று மாகாண சபைகளுக்கு செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை கண்காணிக்கும் சர்வதேசக் குழுக்களின் ஒரு பிரிவுக்கு இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபலஸ்வாமி தலைவராகச் செல்கிறார்.

இதை பிபிசி தமிழோசையிடம் அவர் உறுதிப்படுத்தினார். அந்தக் குழுவில் நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் உள்ளிட்ட பன்னாட்டு பிரதிநிதிகளும் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பிலிருந்து செல்லும் பார்வையாளர்கள் எதிர்வரும் 13 ஆம் தேதி அங்கு செல்வார்கள் என்றும், இலங்கையில் 23 ஆம் தேதி வரை தங்கியிருந்து தமது பணிகளைச் செய்வார்கள் என்றும் கோபாலஸ்வாமி பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

தமது குழுவினர் இலங்கை சென்ற பிறகு யார் எந்த மாகாணத்துக்குச் செல்வார்கள் என்பது முடிவாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பன்னாட்டுப் பார்வையாளர்கள் தமக்கு ஒத்துக்கப்படும் பகுதிகளுக்குச் சென்று அங்கு தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றதா என்பதை உன்னிப்பாக கவனித்து தமது அறிக்கையினை அளிப்பார்கள் எனவும் அவர் கூறினார்.

இலங்கைத் தேர்தல் ஆணையம் தங்களுக்கான வசதிகளைச் செய்து கொடுத்தாலும், தமது குழுவினர் சுயாதீனமாகவே செயல்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள், முறைப்பாடுகள் குறித்து பல்வேறு நாடுகளின் வரைமுறைகள் மாறுபடுகின்றன எனவும், இது தொடர்பிலான சர்வதேச வழிமுறைகளும் கடைபிடைக்கப்படும் எனவும் அவர் கூறுகிறார்.

தாம் செல்லும் பார்வையாளர் குழு தவிர, வேறு பல நாடுகளிலிருந்தும் இத்தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்கள் வருகிறார்கள் எனவும் அவர் கூறினார்.