"ததேகூ தேர்தல் அறிக்கை தனிநாட்டுக்கான துவக்கம்"

  • 8 செப்டம்பர் 2013
ததேகூ முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரன்
Image caption ததேகூ முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை குறித்து தென்னிலங்கை கட்சிகள் பலவும் எதிர்ப்பையும், விமர்சனத்தையும் வெளியிட்டிருக்கின்றன.

விடுதலைப்புலிகளினால் முடியாமல் போயுள்ள தனிநாட்டை உருவாக்குவதற்குரிய ஆரம்ப நடவடிக்கையாகவும் இந்தத் தேர்தல் அறிக்கையை சில கட்சிகள் வர்ணித்திருக்கின்றன. சர்வதேசத்தின் ஆதரவுடன் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் தென்னிலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றன. எனினும் தென்னிலங்கைக் கட்சிகளின் பார்வையையும், குற்றச்சாட்டுக்களையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்வு நிராகரித்திருக்கின்றது. அத்துடன் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண்பதையே நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது. தமிழரின் பாரம்பரிய பிரதேசமாகிய வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்து, தன்னாட்சி கொண்ட தமிழ் மக்களின் ஆட்சியதிகாரத்தை நிலைநிறுத்துவது, வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் சிவில் செயற்பாடுகளில் நிலவுகின்ற இராணுவ தலையீட்டை இல்லாமல் செய்து, சுதந்திரமான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவது, மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்று பலதரப்பட்ட விடயங்கள் குறித்து இந்தத் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆளும் கட்சியாகிய சிறிலங்கா சுதந்திரக்கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையை நிராகரித்திருக்கின்றது. சர்வதேசத்தின் தேவைக்கேற்ற வகையில் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க முடியாது. அதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று அந்தக் கட்சி குறிப்பிட்டிருக்கின்றது.

அதேவேளை, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசிய கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் சில விடயங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கன. சில விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்திருக்கின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகிய ரவி கருணநாயக்க கூறுகின்றார்.

வடமாகாணத்தில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது பற்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையில் எதையுமே குறிப்பிடவில்லை என்றும், இந்தியாவின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளையே கூட்டமைப்பு மேற்கொண்டிருப்பதாகவும்ஜேவிபியின் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியிருக்கிறார்.

இதற்கிடையில் வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் நிலைப்பாடு தொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த முடிவையும் எடுக்க வில்லை என அதன் செயலாளர் ஹசன் அலி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.